பட்டாசு தொழிலை பாதுகாப்போம் விருதுநகர் தொகுதி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி உறுதி


பட்டாசு தொழிலை பாதுகாப்போம் விருதுநகர் தொகுதி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி உறுதி
x
தினத்தந்தி 5 April 2019 4:30 AM IST (Updated: 5 April 2019 4:59 AM IST)
t-max-icont-min-icon

பட்டாசு தொழிலை பாதுகாப்போம் என விருதுநகர் தொகுதி பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி அளித்தார்.

சாத்தூர்,

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் அழகர்சாமி, சாத்தூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ராஜவர்மன் ஆகியோரை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு சிவகாசி அருகே உள்ள செவல்பட்டி கிராமத்தில் பிரசாரத்தை தொடங்கினார். அவருடன் வேட்பாளர்களும், அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியும் சென்றனர். தொடர்ந்து தாயில்பட்டி, சாத்தூர், அனுப்பன்குளம் ஆகிய பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

நாடு நலம் பெற திறமையான நரேந்திர மோடி தொடர்ந்து பிரதமராக இருக்க வேண்டும். அதற்காக நீங்கள் அனைவரும் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளருக்கு முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். சாத்தூர் தொகுதியில் இடைத்தேர்தல் வர என்ன காரணம் என்று உங்களுக்கு தெரியும். எனவே துரோகம் இழைத்தவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும். அவர்களுக்கு கொடுக்கும் தண்டனையாக நீங்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ராஜவர்மனை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மெகா கூட்டணி. தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளையும் கைப்பற்றி இந்தியாவுக்கு ஒரு வலிமையான பிரதமரை கொடுப்போம்.

ஜெயலலிதா 100 ஆண்டுகளுக்குப் பின்னரும் அ.தி.மு.க. இருக்கும் என்று கூறினார். அவரது லட்சிய வார்த்தை நிறைவேற, துரோகிகளுக்கு பாடம் புகட்ட இந்த தேர்தலில் நாம் உறுதியான வெற்றியை பெற வேண்டும். ஜெயலலிதாவால் விலாசம் பெற்ற சிலர் தற்போது நடுத்தெருவில் நிற்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சி மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

கட்சியை கைப்பற்ற சிலர் திட்டமிட்டனர். ஆனால் அது நடக்கவில்லை. இந்த தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க. வேட்பாளரை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். 10 ஆண்டுகளாக கட்சியில் இல்லாத தினகரன் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் திடீரென கட்சிக்குள் வந்தார். அவர் அ.தி.மு.க. அரசை கவிழ்க்க தி.மு.க.வோடு சேர்ந்து சதி செய்தார். அதை நாம் முறியடித்ததால், தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தின் முதன்மையான தொழில் பட்டாசு தொழில். அந்த தொழிலை காக்க இந்த அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. உச்சநீதிமன்றத்தில் பட்டாசு தொடர்பான வழக்கு நடந்து வருகிறது. இதற்காக சிறந்த வக்கீல்களை வைத்து வாதாடி வருகிறோம். இந்த வழக்கில் நீதிமன்றம் மூலம் நீதி கிடைக்கும். பட்டாசு தொழிலை பாதுகாக்க அ.தி.மு.க. அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை ஆகிய 3 ஒன்றியங்களில் உள்ள 750 கிராமங்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்தப்பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது. இந்தப்பணிகள் முடிவடைந்த உடன் அனைத்து கிராமங்களுக்கும் தினமும் குடிநீர் வழங்கப்படும்.

தைப் பொங்கலுக்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கியதுபோல அரசு அறிவிக்கும் அனைத்து திட்டங்களும் தேர்தலுக்கு பின்னரும் செயல்படுத்தப்படும். வீடு இல்லாத ஏழைகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தரப்படும்.

தமிழகம் முழுவதும் மழைக்காலங்களில் பெய்யும் தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது. இதனை விவசாயத்துக்கும், குடிநீராகவும் பயன்படுத்த ரூ.1000 கோடி செலவில் தடுப்பணைகள் கட்டப்பட உள்ளது. விவசாயிகள் தங்கள் கால்நடை வளர்ப்பு தொழிலை சிறப்பாக செய்யும் வகையில் கால்நடை பூங்கா அமைக்கப்படுகிறது. இந்த அரசு மக்களுக்கு தேவையானதை பூர்த்தி செய்யும் அரசாக உள்ளது.

மக்கள் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஸ்டாலின் என்ன பேசுவது என்றே தெரியாமல் பேசி வருகிறார். அ.தி.மு.க.வின் தலைமையிலான கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

பிரசாரத்தில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர். முதல்-அமைச்சருக்கு பல்வேறு இடங்களில் உற்சாக வரவேற்பும் அளிக்கப்பட்டது.

நேற்று அனுப்பன்குளத்தில் பிரசாரத்தை முடித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு சிவகாசியில் தங்கினார்.

Next Story