காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் விவசாய கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் - ப.சிதம்பரம் பேச்சு


காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் விவசாய கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் - ப.சிதம்பரம் பேச்சு
x
தினத்தந்தி 4 April 2019 11:29 PM GMT (Updated: 4 April 2019 11:29 PM GMT)

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் விவசாய கடன் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று ப.சிதம்பரம் கூறினார்.

தேவகோட்டை,

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து தேவகோட்டை அருகே உள்ள திருவேகம்புத்தூர், சருகணி, புளியால் ஆகிய பகுதியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பிரசாரம் செய்து பேசியதாவது:-

தந்தை பெரியார், அண்ணா, காமராஜர், கருணாநிதி, காயிதேமில்லத் ஆகிய தலைவர்கள் தமிழகத்தில் சுயமரியாதை, பகுத்தறிவு, தாய்மொழி பற்று, பெண்கள் முன்னேற்றம், சொத்துரிமை, குழந்தை திருமணத்திற்கு தடை போன்ற சமூக புரட்சிகளை செய்ததன் விளைவாக இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. இதேபோன்ற கருத்துக்களால் தமிழ் சமுதாயம் முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்த சமுதாயத்திற்கு பா.ஜ.க. வடிவில் சவால் வந்துள்ளது. அந்த கட்சி வடநாட்டு கட்சியாகும். இந்து மதம் என்பது வேறு, இந்துத்துவா என்பது வேறு.

உத்தரபிரதேசத்தில் துறவியாக உள்ள தற்போதைய முதல்வர் சாதி அமைப்புகள் இந்த நாட்டில் இருக்க வேண்டும் என்று பேசி வருகிறார். பாரதீய ஜனதா விஷம் வித்து கட்சியாகும். அதை வளர்த்து விடகூடாது. வடநாட்டில் எப்போது வேண்டுமானாலும் கலவரம் வெடிக்கலாம் என்ற அச்சத்துடன் மக்கள் உள்ளனர். அந்த கும்பல் தமிழகத்திலும் காலூன்றி கலவரம் செய்ய நினைக்கிறது. கலப்பு திருமணங்கள் செய்பவர்களை தாக்குகிறது.

நான் கூட கலப்பு திருமணம் செய்தவன் தான். தந்தை பெரியார் எனது திருமணத்திற்கு வந்து வாழ்த்தினார். காங்கிரஸ் ஆட்சியில் 16 கோடி பேர் வறுமைக்கோட்டில் இருந்து மீட்கப்பட்டு நடுத்தர வர்க்கத்தினராக மாற்றப்பட்டனர். இப்போது கடைநிலையில் உள்ள 5 கோடி குடும்பங்களுக்கு ஆண்டிற்கு ரூ.72 ஆயிரம் வழங்க உள்ளோம். இந்தியா விவசாய நாடாக உள்ளது. விவசாயிகள் வாங்கிய கடனை கட்ட முடியாமல் தவித்து வந்ததால் அவர்களின் கடன் சுமையை தீர்ப்பதற்காக கடந்த 2008-ம் ஆண்டு ரூ.68 ஆயிரம் கோடி கடன்களை ரத்து செய்து காட்டினோம். கடந்த 5 ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் 4 கோடியே 70 லட்சம் வேலை வாய்ப்புகளை இழந்துள்ளோம் என்ற தகவல் இப்போது கசிய தொடங்கியுள்ளது. ஏற்கனவே அமித்ஷா தமிழக ஆட்சியை மோசடி, ஊழல் ஆட்சி என்று கூறினார். இப்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வமும் மிக சிறப்பான ஆட்சி நடத்துவதாக கூறுகிறார்.

காங்கிரஸ் கட்சி விவசாயிகள் குறித்து ஆய்வு நடத்தியது. அதில் 11 ஆண்டுகளில் கடன் சுமை அதிகரித்து உள்ளது. தற்போது பா.ஜ.க. அரசு கடன் கட்டாத விவசாயிகள் மீது வழக்கு போட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. காங்கிரஸ் அரசு அமைந்ததும் விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்து அவர்கள் மீது எவ்வித வழக்கும் இல்லாத நிலையை உருவாக்குவோம். சீனாவில் விவசாய உற்பத்தி அதிகரித்துள்ளது. அதற்கு காரணம் புதிய யுக்திகளையும், விஞ்ஞானத்தையும் புகுத்தியதால் அவர்கள் அபார வளர்ச்சி பெற்றுள்ளனர். அதே விஞ்ஞானம் காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் அறிமுகப்படுத்தப்படும். ஒவ்வொரு விவசாயியும் இதன் மூலம் பயன்பெறும் வகையில் மாவட்டங்கள் தோறும் விவசாய கல்லூரிகள், கால்நடை கல்லூரிகள் விஞ்ஞான தொழில்நுட்பத்துடன் நடத்தப்படும். தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் வெளி மாநில மாணவர்கள் தான் அதிக அளவில் படித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் படித்த மாணவர்கள் பயன்பெற வேண்டும் என்பதற்காக நீட் தேர்வை ரத்து செய்ய உள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கே.ஆர்.ராமசாமி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. சுப.துரைராஜ், வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் பூங்கொடி வெங்கடாச்சலம், பிரபாகரன், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் பூபாலசிங்கம், நாகணி ரவி, அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் மீராஉசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவகங்கை ராமச்சந்திரனார் பூங்கா, வழிவிடும் முருகன் கோவில், அரண்மனை வாசல் பகுதியில் கார்த்தி சிதம்பரம் பிரசாரம் செய்து பேசும்போது, பண மதிப்பு இழப்பீடு மற்றும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. அரசு மத கலவரத்தையும், இன கலவரத்தையும் உண்டாக்குகிறது. இதுபோன்ற அரசு மீண்டும் வரக்கூடாது என்றார்.

Next Story