தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்த ரகசியங்களை வெளியே கொண்டு வருவோம் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு


தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்த ரகசியங்களை வெளியே கொண்டு வருவோம் - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 4 April 2019 11:15 PM GMT (Updated: 4 April 2019 11:29 PM GMT)

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதாவின் மரணம் குறித்த ரகசியங்களை வெளியே கொண்டு வருவோம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

இளையான்குடி,

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் மற்றும் மானாமதுரை தொகுதி தி.மு.க. வேட்பாளர் இலக்கியதாசன் ஆகியோரை ஆதரித்து இளையான்குடியில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:- மத்திய அரசை வெளியேற்றுவதற்காக இந்த தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கு முக்கிய காரணம் தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு உள்பட பல்வேறு பாதிப்புகளுக்கு மோடி எந்தவித நிவாரண தொகை வழங்காமல் தமிழக மக்களை கண்டுகொள்ளாமல் இருந்தார். ஆனால் குஜராத் மாநிலத்தில் ரூ.3 ஆயிரம் கோடியில் சிலை வைத்துள்ளார். பண மதிப்பு இழப்பீடு செய்து புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்று கூறி 150 பேர் தற்கொலை செய்வதற்கு காரணமாக இருந்தவர் மோடி.

தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டத்தில் 13 பேர் பலியாக மாநில அரசு தான் காரணம். சட்டப்படி போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கால் பகுதியில் தான் துப்பாக்கியால் சுட வேண்டும். ஆனால் இந்த அரசு ஒரு பெண்ணின் முகத்தில் சுட்டு கொலை செய்தது. மேலும் நீட் தேர்விற்கு ஒரு மாணவியை பலி கொடுத்துள்ளார்கள்.

ஆனால் நாங்கள் என்றும் சிறுபான்மை மக்களுக்கு காவலாக இருப்போம்.

பா.ஜ.க. வேட்பாளர் எச்.ராஜா சிறுபான்மை மக்களுக்கு எதிரானவர். அவர் சாதாரண சாரணர் படை தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார். அவர் தான் இந்த தொகுதியின் வேட்பாளர். நாங்கள் சொல்வதை தான் செய்வோம். செய்வதை தான் சொல்வோம். மாணவர்களுக்கு ரெயில் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கிராமப்புற மக்களுக்கு வழங்கப்பட்ட 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்துவோம்.

தற்போது தேர்தலின் கதாநாயகன் ராகுல்காந்தி. காரணம் ஏழை மக்களுக்கு ஆண்டுதோறும் ரூ.72 ஆயிரம் வழங்குவதாக அறிவித்துள்ளார். அதேபோல் இளையான்குடி பகுதிக்கு புதிய பஸ் நிலையம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.

தற்போது உள்ள மத்திய-மாநில அரசுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் 35 ஆயிரம் போராட்டங்கள் நடந்துள்ளது. காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் உள்ள குறைகள் தி.மு.க. ஆட்சியில் சரி செய்யப்பட்டது.

முதல்-அமைச்சராக இருந்து மறைந்த ஜெயலலிதா இந்த ஆட்சியில் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் இறந்துள்ளார்.

சுமார் 85 நாட்கள் வரை மருத்துவமனையில் இருந்த அவருக்கு என்ன நடந்தது என்பது இன்றுவரை தெரியவில்லை.

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்த ரகசியங்களை வெளியே கொண்டு வருவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story