பயிர் இழப்பீடு தொகை வழங்கக்கோரி ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு பயிர் இழப்பீடு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்.எஸ்.மங்கலம்,
ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்.எஸ்.மங்கலம், சோழந்தூர், ஆனந்தூர் ஆகிய பிர்காவுக்கு உட்பட்ட ஏ.மணக்குடி, ஆனந்தூர், ஓடக்கரை, கோவிந்தமங்கலம், ஆணையார்கோட்டை, ராதானூர், திருத்தேர் வளை, கள்ளிக்குடி, தும்படைக்கா கோட்டை, துத்தியேந்தல், சுத்தமல்லிகருங்குடி, ஏ.ஆர்.மங்கலம், பகவதிமங்கலம், கூடலூர், களங்காப்புலி, கருங்குடி, கவ்வூர், ஓடைக்கால், பெத்தார்தேவன் கோட்டை 19 வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட 100-க்கு மேற்பட்ட கிராமங்களில் 2017-18-ம் ஆண்டில் பயிர் காப்பீடு இழப்பீடு தொகை 25 சதவீதம் கணக்கிடப்பட்டது. இது தவறுதலாக கணக்கிடப்பட்டு உள்ளதாக விவசாயிகள் மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு கொண்டுசென்றனர். இதையடுத்து நடைபெற்ற ஆய்வில் வருவாய் துறை அதிகாரிகள் இப்பகுதிகளில் 100 சதவீதம் பயிர் இழப்பீடு உள்ளது என்பதை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த மாதம் திருவாடானை சி.கே.மங்கலத்தில் ஒட்டுமொத்த விவசாயிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது அங்கு வருகை தந்த கலெக்டரின் நேர்முக உதவியாளர் 100 சதவீதம் இழப்பீடு வழங்குவதாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் இதுவரை 40 சதவீதம் அதாவது ரூ. 5,300 மட்டுமே கணக்கில் வர வைக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து 19 வருவாய் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் தாலுகா அலுவலகம் முன்பு ஏ.ஆர்.மங்கலம் காந்தி, பால்குளம் ரவிச்சந்திரன், வடக்கலூர் சேகர், மாரியப்பன், வெளியக்கோட்டை ராமசாமி, தும்படைக்காகோட்டை காளிதாஸ், கள்ளிக்குடி சேகர், ராமஜெயம் ஆகியோர் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் உண்ணாவிரதம் இருந்து, தேர்தலை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்தனர்.
அவர்களிடம் ஆர்.எஸ்.மங்கலம் தாசில்தார் தமீம்ராஜா பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தேர்தலைப் புறக்கணிப்பது சட்டப்படி குற்றம், உங்களுடைய கோரிக்கையை மாவட்ட கலெக்டரின் கவனத்திற்கு எடுத்து செல்வதாக உறுதியளித்தார். அப்போது விவசாயிகள் வருகிற 10-ந்தேதிக்குள் பயிர் இழப்பீட்டு தொகையை முழுமையாக வங்கி கணக்கில் வரவு வைக்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக தெரிவித்தனர்.
Related Tags :
Next Story






