திட்டக்குடி அருகே, இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


திட்டக்குடி அருகே, இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 5 April 2019 4:15 AM IST (Updated: 5 April 2019 4:59 AM IST)
t-max-icont-min-icon

திட்டக்குடி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திட்டக்குடி,

திட்டக்குடி அருகே உள்ள ஆவினங்குடி கிராமத்தை சேர்ந்தவர் ராஜாராம். இவரது மனைவி சுமித்ரா (வயது 22). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. 3 வயதில் இனியா என்ற மகள் உள்ளார். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த ராஜாராம், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார்.

அதன் பிறகு அவர் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்லாமல், தினசரி குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த சுமித்ரா கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மகளுடன் இடைச்செருவாயில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் வீட்டில் தனது சேலையால் தூக்குப்போட்டுக் கொண்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திருச்சி தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சுமித்ரா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திட்டக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். சுமித்ராவுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆவதால் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து, விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரசாந்த், திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் ஆகியோரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story