மறைமலைநகர் பகுதியில் தொடர்திருட்டு, வழிப்பறி; 2 பேர் கைது 30 பவுன் நகை, மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்


மறைமலைநகர் பகுதியில் தொடர்திருட்டு, வழிப்பறி; 2 பேர் கைது 30 பவுன் நகை, மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 5 April 2019 10:45 PM GMT (Updated: 5 April 2019 6:03 PM GMT)

மறைமலைநகர் பகுதியில் தொடர் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்டதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 30 பவுன் நகை, மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

வண்டலூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதியில் சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் நகை பறிப்பு மற்றும் வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவம் மற்றும் பொது இடங்களில் நிறுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் திருடு போகும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வளவன் உத்தரவின்பேரில் மறைமலைநகர் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் நெடுமாறன், செல்வம் மற்றும் போலீசார் கொண்ட 2 தனிப்படை குழுவினர் அமைக்கப்பட்டது. அவர்கள் குற்றவாளிகளை பல்வேறு இடங்களில் தேடிவந்தனர்.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் மாலை மறைமலைநகர் டான்சி பஸ் நிறுத்தம் அருகே தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் வேகமாக செல்ல முயன்றனர்.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த மோட்டார் சைக்கிளை துரத்தி சென்று மடக்கி பிடித்து விசாரித்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை போலீசாரிடம் தெரிவித்தனர். இதனையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார் இருவரையும் மறைமலைநகர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது அவர்கள் இருவரும் பூட்டியிருக்கும் வீடுகளின் பூட்டை உடைத்து திருடியதையும், சாலையில் நடந்து செல்லும் பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டதையும், 3 மோட்டார் சைக்கிள்கள் திருடியதையும் ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து மறைமலைநகர் போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் மறைமலைநகர் காந்தி நகர் பகுதியை சேர்ந்த லிங்கா என்கிற லிங்கன் (வயது 27), ஜெகன் என்கிற ஜெகதீசன் ( 19) இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 30 பவுன் தங்க நகைகள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரையும் தனிப்படை போலீசார் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Next Story