புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை வாகன சோதனையில் ரூ.25 லட்சம் பறிமுதல்


புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை வாகன சோதனையில் ரூ.25 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 6 April 2019 3:30 AM IST (Updated: 6 April 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை வாகன சோதனையில் ரூ.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

புதுக்கோட்டை, 

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர்கள் இடையே வாக்களிப்பதன் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள் தவறாமல் வாக்களிக்கும் வகையில், 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்தியனின் முதல் பெருமை வாக்களிப்பது என்பது குறித்த தேர்தல் விழிப்புணர்வு அஞ்சல் அட்டைகள் மாவட்ட நிர்வாகத்தால் வெளியிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அச்சிடப்பட்டு உள்ள 40 ஆயிரம் தேர்தல் விழிப்புணர்வு அஞ்சல் அட்டைகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த தேர்தலின்போது குறைந்த வாக்குப்பதிவு நடைபெற்ற பகுதிகளில் தபால் ஊழியர்கள் மூலம் வாக்காளர்களுக்கு வீடு, வீடாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா 3 பறக்கும்படை, 3 நிலையான கண்காணிப்புக்குழு, 2 வீடியோ கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் 24 மணி நேரமும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசியல் கட்சியினரின் பொதுக்கூட்டங்கள், பிரசாரங்கள் போன்றவை வீடியோவில் பதிவு செய்யப்பட்டு, அதன் விவரம் செலவின பார்வையாளருக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும் படையினர் தற்போது வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அந்த வழியாக வரும் கார், லாரிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர்.

இவ்வாறு சோதனையின்போது உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இதன்படி புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் ரூ.3 லட்சத்து 68 ஆயிரம், கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் ரூ.17 லட்சத்து 47 ஆயிரத்து 800, விராலிமலை சட்டமன்ற தொகுதியில் ரூ.1 லட்சத்து 33 ஆயிரத்து 320, ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் ரூ.93 ஆயிரத்து 545, அறந்தாங்கி சட்டமன்ற தொகுதியில் ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்து 200 என புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை மொத்தம் ரூ.25 லட்சத்து 8 ஆயிரத்து 865-ஐ பறக்கும் படையினர் பறிமுதல் செய்து உள்ளனர்.

Next Story