விடைத்தாள்கள் திருத்தும் மையங்களில் ஆசிரியர்கள் திடீர் போராட்டம்
திருச்சியில் விடைத்தாள்கள் திருத்தும் மையங்களில் ஆசிரியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருச்சி,
தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு சமீபத்தில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து விடைத்தாள்கள் திருத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருச்சியில் ஜோசப் கல்லூரி மேல்நிலைப்பள்ளி, மண்ணச்சநல்லூர், முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிகள் ஆகிய மையங்களில் பிளஸ்-2, பிளஸ்-1 மாணவ-மாணவிகளின் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வருகிறது. இதேபோல எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள்கள் திருத்தும் பணி திருச்சியில் இ.ஆர். மேல்நிலைப்பள்ளி, தெப்பகுளம் பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 2 மையங்களிலும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) தெலுங்கு வருட பிறப்பையொட்டி அரசு விடுமுறை ஆகும். ஆனால் விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெறும் எனவும், பண்டிகை கொண்டாடுபவர்கள் மட்டும் விடுப்பு எடுத்து கொள்ளும்படியும், மற்ற ஆசிரியர்கள் பணிக்கு வரும்படி அதிகாரிகள் உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. இதற்கு விடைத்தாள்கள் திருத்தும் மையங்களில் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருச்சி ஜோசப் கல்லூரி மேல்நிலைப்பள்ளி விடைத்தாள் திருத்தும் மையத்தில் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் நேற்று மதியம் அனைவரும் திடீரென ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இன்று பணிக்கு வர மாட்டோம் என தெரிவித்து மைய அதிகாரிகளிடம் கடிதம் எழுதி கொடுத்தனர். இதேபோல் தமிழகம் முழுவதும் விடைத்தாள்கள் திருத்தும் மையங்களில் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் விடைத்தாள் திருத்தும் பணியில் பாதிப்பு ஏற்படும் நிலை உருவானது.
இந்த நிலையில் தெலுங்கு வருட பிறப்பையொட்டி இன்று விடுமுறை விடப்படுவதாகவும், விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெறாது என பள்ளிக்கல்வி துறை உயர் அதிகாரிகள் நேற்று மாலை உத்தரவிட்டனர். இன்று விடுமுறை விடப்பட்டதால் ஆசிரியர்கள் மகிழ்ச்சியடைந்தனர். விடைத்தாள்கள் குறிப்பிட்ட நாட்களுக்குள் திருத்தி முடிக்கப்பட்டு அறிவிக்கப்பட்ட தேதிகளில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story