பென்னாகரம் தாலுகா அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
பென்னாகரம் தாலுகா அலுவலகம் முன்பு குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பென்னாகரம்,
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பேரூராட்சிக்குட்பட்ட போடூர் காலனியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. குடிநீர் வழங்கக்கோரி சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். ஆனால் சீரான குடிநீர் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்தநிலையில் நேற்று போடூர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் பென்னாகரம் தாலுகா அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் குடிநீர் கேட்டு பென்னாகரம்-ஒகேனக்கல் செல்லும் சாலையில் பென்னாகரம் தாலுகா அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பென்னாகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது போடூர் காலனிக்கு 15 நாட்களாக சீரான குடிநீர் வழங்குவதில்லை. தெருக்களில் குப்பைகள் மண்டி கிடக்கிறது. அதை சுத்தம் செய்ய ஆட்களை அனுப்புவதில்லை. மின்கம்பம் பழுது ஏற்பட்டுள்ளதாக பல முறை கூறியும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. எங்கள் பகுதிக்கு சீராக குடிநீர் வழங்க வேண்டும் என்று கூறினர். இதையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு மேகலா, மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, தனி தாசில்தார் ரேவதி, பேரூராட்சி செயல் அலுவலர் கோபால் ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பழுதான மின் மோட்டார் உடனடியாக சரி செய்யப்பட்டு குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அடிப்படை வசதிகள் தேர்தல் முடிந்ததும் நிரந்தரமாக தீர்க்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Related Tags :
Next Story