தமிழ்நாட்டில் நல்ல ஆட்சி ஏற்பட வேண்டும் கோபி தேர்தல் பிரசாரத்தில் கமல்ஹாசன் பேச்சு
தமிழ்நாட்டில் நல்ல ஆட்சி ஏற்பட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கோபியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பேசினார்.
கோபி,
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் சந்திரகுமாரை ஆதரித்து அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன், ஈரோடு மாவட்டம் கோபி பெரியார் திடலில் வாக்குகள் சேகரித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரான சந்திரகுமாரை நீங்கள் (பொதுமக்களை பார்த்து) தெரிந்து வைத்து உள்ளீர்களா? எந்த சின்னத்தில் அவர் போட்டியிடுகிறார் என தெரியுமா? என்றவாறு தன் கையில் இருந்த ‘டார்ச் லைட்டை’ எடுத்து சின்னத்தை விளக்கும் விதமாக அதை காண்பித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளரான சந்திரகுமார், டெல்லி சென்று உங்கள் பிரதிநிதியாக இருந்து இந்த தொகுதி குறைகளை தீர்ப்பார். இப்படிப்பட்ட வேட்பாளரைத்தான் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். தற்போது நான் தமிழகத்தில் மட்டும் தான் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன்.
இந்த நாடாளுமன்ற தேர்தல் நேர்மையான தேர்தலாக நடக்க வேண்டும். எனக்கு சொத்து, பணம் உள்ளது. அதை மக்களுக்காகத்தான் செலவு செய்வேன். ஆனால் ஓட்டுக்காக பணம் கொடுக்க மாட்டேன். அதுதான் எங்கள் கட்சியின் நேர்மை அடையாளம்.
தமிழ்நாட்டில் ஒரு புரட்சி ஏற்பட உள்ளது. அப்போது தமிழ்நாட்டுக்கு ஒளிவிளக்காக எங்களுடைய ‘டார்ச் லைட்’ இருக்கும். மக்கள் நீதி மய்யம் கட்சி சின்ன கட்சி. அந்த கட்சியால் ஆட்சியை சிறப்பாக நடத்த முடியுமா? என நீங்கள் நினைக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் சிறந்த ஆட்சியாக எங்கள் கட்சியின் ஆட்சி இருக்கும் என தெரிவித்து கொள்கிறேன். தற்போது இருப்பது குப்பை கொட்டும் ஆட்சியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் நல்ல ஆட்சி ஏற்பட வேண்டும். இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை ஆக்குவதுதான் எனது கடமை.
இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.