புஞ்சைபுளியம்பட்டி அருகே பரபரப்பு ஊருக்குள் புகுந்த 3 யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியபோது முதியவரை தூக்கி வீசியது


புஞ்சைபுளியம்பட்டி அருகே பரபரப்பு ஊருக்குள் புகுந்த 3 யானைகள் வனப்பகுதிக்குள் விரட்டியபோது முதியவரை தூக்கி வீசியது
x
தினத்தந்தி 6 April 2019 4:00 AM IST (Updated: 6 April 2019 12:58 AM IST)
t-max-icont-min-icon

புஞ்சைபுளியம்பட்டி அருகே ஊருக்குள் புகுந்த 3 யானைகளால் பரபரப்பு ஏற்பட்டது. யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டும்போது முதியவர் ஒருவரை யானை ஒன்று துதிக்கையால் தூக்கி வீசியது.

புஞ்சைபுளியம்பட்டி,

பவானிசாகர், விளாமுண்டி வனப்பகுதியில் ஏராளமான மான், யானை, காட்டெருமை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் வனக்குட்டைகள் தண்ணீரின்றி வறண்டுவிட்டன. இதனால் வனவிலங்குகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிரை சேதப்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் விளாமுண்டி வனப்பகுதியில் இருந்து 3 யானைகள் வெளியேறின. பின்னர் தண்ணீர் தேடி அங்கும் இங்குமாக சுற்றித்திரிந்தன. அதன்பின்னர் இந்த யானைகள் சத்தி–மேட்டுப்பாளையம் ரோடு, புளியம்பட்டி–பவானிசாகர் ரோடு, புளியம்பட்டி–சத்தி தேசிய நெடுஞ்சாலையை கடந்து காவிலிபாளையம் ஊருக்குள் நேற்று அதிகாலை 3 மணி அளவில் புகுந்தன.

அங்குள்ள வேலுச்சாமி என்பவரது விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிரை சேதப்படுத்த தொடங்கின. யானைகளின் சத்தம் கேட்டு வேலுச்சாமி அங்கு சென்று பார்த்தார். அப்போது நிலத்துக்குள் 3 யானைகள் நிற்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே இதுபற்றி அவர் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்தார்.

அதைத்தொடர்ந்து பொதுமக்கள் அங்கு வந்து யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால் முடியவில்லை. இதைத்தொடர்ந்து விளாமுண்டி வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் அங்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டார்கள்.

அங்கிருந்து சென்ற யானைகள் சின்னான்குட்டை வழியாக நல்லூர் ஓடைக்காட்டு தோட்டம் பகுதிக்கு சென்றன. அங்குள்ள ஒரு முட்புதருக்குள் 3 யானைகளும் பதுங்கி நின்றன. சிறிது நேரம் அந்த பகுதியில் சுற்றி திரிந்தன. இதை அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டு வேடிக்கை பார்த்தனர். இதைத்தொடர்ந்து வனத்துறையினர் அங்கு சென்று பொதுமக்கள் யானைகளை நெருங்காத வண்ணம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் பட்டாசு வெடித்து யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அங்கிருந்து நகரவில்லை. இதனால் வனத்துறையினர் முட்புதரை சுற்றி தீ வைத்தனர். வெப்பம் தாங்காமல் யானைகள் புதரை விட்டு வெளியே வந்தன. அதைத்தொடர்ந்து வனத்துறையினர் பொக்லைன் எந்திரம் கொண்டு வந்து காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

நல்லூரில் இருந்து சென்ற யானைகள் அருகே உள்ள சத்தி–கோவை ரோட்டுக்கு வந்தன. ரோட்டின் நடுவில் நின்று கொண்டன. இதனால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியவில்லை. சுமார் 1 மணி நேரம் போராடி யானைகளை அங்கிருந்து விரட்டிவிட்டனர். இதனால் அந்த ரோட்டில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர் பவானிசாகர்–புளியம்பட்டி ரோட்டில் உள்ள சுங்ககாரன்பாளையத்துக்குள் யானைகள் புகுந்தன. அங்கிருந்து யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

அங்கிருந்து யானைகள் செல்லும் வழியில் பச்சாமல்லனூர் பகுதியில் உள்ள தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளியான ரங்கசாமியை யானை ஒன்று துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார். இதை பார்த்த வனத்துறையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் இரவு 10 மணி அளவில் யானைகளை வனத்துறையினர் வனப்பகுதிக்குள் விரட்டினர்.

ஊருக்குள் புகுந்த 3 யானைகளால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story