அம்மாபேட்டை அருகே தனியரசு எம்.எல்.ஏ. காரில் அதிகாரிகள் சோதனை கட்சிக்கொடி அகற்றம்
அம்மாபேட்டை அருகே பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் தனியரசு எம்.எல்.ஏ. காரில் இருந்த கட்சிக்கொடி அகற்றப்பட்டது.
அம்மாபேட்டை,
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே கோனேரிப்பட்டி பிரிவு என்ற இடத்தில் பவானி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி சத்யராஜ் மற்றும் சப்–இன்ஸ்பெக்டர் ராஜன் ஆகியோரது தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை சோதனை செய்வதற்காக அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். காரின் உள்ளே பார்த்தபோது தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவரும், காங்கேயம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான உ.தனியரசு தனது ஆதரவாளர்களுடன் இருந்தார். அதிகாரிகளை பார்த்ததும் அவர் உடனே காரில் இருந்து இறங்கி சோதனை செய்ய ஒத்துழைத்தார்.
அப்போது அவருடைய காரின் முன் பகுதியில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் கொடி கட்டப்பட்டு இருந்தது. தேர்தல் விதிமுறை அமலில் உள்ளதால் அந்த கொடியை அதிகாரிகள் அகற்றும்படி கூறினர்.
அதைத்தொடர்ந்து உ.தனியரசு தனது ஆதரவாளரை அழைத்து கொடியை அகற்றும்படி கூறினார். இதையடுத்து கொடி அகற்றப்பட்டது. மேலும் காரில் பணமோ, பொருளோ எதுவும் சிக்கவில்லை.