ஈரோட்டில் துணிகரம் போலீஸ்காரர் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை ரூ.1½ லட்சத்தையும் மர்ம நபர்கள் அள்ளிச்சென்றனர்


ஈரோட்டில் துணிகரம் போலீஸ்காரர் வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை கொள்ளை ரூ.1½ லட்சத்தையும் மர்ம நபர்கள் அள்ளிச்சென்றனர்
x
தினத்தந்தி 5 April 2019 10:45 PM GMT (Updated: 5 April 2019 7:28 PM GMT)

ஈரோட்டில் போலீஸ்காரர் வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 20 பவுன் நகை மற்றும் ரூ.1½ லட்சத்தை அள்ளிச்சென்றனர்.

ஈரோடு,

ஈரோடு முத்தம்பாளையம் வீட்டு வசதி வாரியம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 35). இவருடைய மனைவி சித்ரா என்கிற மைதிலி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பார்த்திபன் ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பார்த்திபன் தனது குடும்பத்தினருடன் ஈரோடு பெரிய மாரியம்மன் கோவிலுக்கு சென்றார். அங்கு அம்மனை தரிசனம் செய்துவிட்டு பின்னர் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பார்த்திபன் உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது வீட்டில் இருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. மேலும் வீட்டில் இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு அதில் இருந்த 20 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை காணவில்லை. அதை யாரோ மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச்சென்றது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து பார்த்திபன் இதுபற்றி ஈரோடு தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், நேற்று முன்தினம் இரவு பார்த்திபன் வீட்டை மர்மநபர்கள் நோட்டமிட்டு உள்ளனர். பின்னர் வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்டு கேட் வழியாக ஏறி உள்ளே குதித்து வீட்டின் பூட்டை கடப்பாரையால் நெம்பி உடைத்து வீட்டுக்குள் புகுந்து, நகை மற்றும் பணத்தை துணிகரமாக கொள்ளை அடித்துச்சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகை மற்றும் பணத்தை அள்ளிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். போலீஸ்காரர் வீட்டிலேயே மர்ம நபர்கள் கைவரிசை காட்டி இருப்பது அந்த பகுதியில் வசிப்பவர்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story