மாற்றுத்திறனாளிகள் தடையில்லாமல் வாக்களிக்க அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கான கண்காணிப்பு குழு கூட்டம்


மாற்றுத்திறனாளிகள் தடையில்லாமல் வாக்களிக்க அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கான கண்காணிப்பு குழு கூட்டம்
x
தினத்தந்தி 6 April 2019 3:15 AM IST (Updated: 6 April 2019 12:58 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் மாற்றுத்திறனாளிகள் தடையில்லாமல் வாக்களிக்க அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கான கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 1,850 வாக்குச்சாவடிகளில், மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் தடையில்லாமல் வாக்களிக்க அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற் கான கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிரபாகர் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:- நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி சட்டமன்ற தொகுதி வாரியாக மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிகளில் எவ்வித சிரமமுமின்றி வாக்களிக்கும் வகையில் அடிப்படை வசதிகளான சாய்வு தளம், சக்கர நாற்காலி, பார்வையற்றோர் வாக்களிக்க வசதியாக பிரெய்லி வாக்குப்பதிவு முறை போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளை மாற்றுத்திறன் வாரியாக கண்டறிந்து விவரம் சேகரிக்க வேண்டும். வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்யேக கழிப்பறை வசதி மற்றும் குடிநீர் வசதி அமைத்து தர வேண்டும். வாக்குச்சாவடிகளில் சக்கர நாற்காலி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளை முன்கூட்டியே கண்டறிந்து, அனைத்து முன்னேற்பாடுகளை செய்து, மாற்றுத்திறனாளிகள் 100 சதவீதம் வாக்களித்திட விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் இப்பணிகளில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், என்.சி.சி. மாணவர்களை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மகிழ்நன் மற்றும் பொதுப்பணித்துறை அலுவலர்கள், கல்வி அலுவலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், அனைவருக்கும் கல்வி இயக்க சிறப்பாசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Next Story