போதமலைக்கு தி.மு.க. ஆட்சியில் தான் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டது இளைஞர் அணி அமைப்பாளர் ராஜேஸ்குமார் பிரசாரம்


போதமலைக்கு தி.மு.க. ஆட்சியில் தான் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டது இளைஞர் அணி அமைப்பாளர் ராஜேஸ்குமார் பிரசாரம்
x
தினத்தந்தி 5 April 2019 10:00 PM GMT (Updated: 5 April 2019 7:49 PM GMT)

ராசிபுரம் அருகே போதமலைக்கு தி.மு.க. ஆட்சியில் தான் அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டது, என்று கொ.ம.தே.க. வேட்பாளர் சின்ராஜை ஆதரித்து தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் ராஜேஸ்குமார் பிரசாரம் செய்தார்.

ராசிபுரம், 

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கொ.ம.தே.க. வேட்பாளராக ஏ.கே.பி.சின்ராஜ் போட்டியிடுகிறார். இவர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்.

ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட போதமலை மலைவாழ் மக்களை மலையடிவாரத்தில் சந்தித்து தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். இந்த பிரசாரத்திற்கு, வெண்ணந்தூர் ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஆர்.எம்.துரைசாமி தலைமை தாங்கினார். நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜை ஆதரித்து அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு அளித்து அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்யும்படி கேட்டுக்கொண்டார்.

இந்த பிரசாரத்தில் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் பேசியதாவது:- போதமலை மலைவாழ் மக்களுக்கு சுகாதார நிலையம், மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தி.மு.க. ஆட்சியில் தான் செய்து தரப்பட்டது. தலைவர் கருணாநிதி ஆட்சியில் தான் (2006-ல்) போதமலை மலைவாழ் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. கிணறு வெட்டி குடிநீர் வசதி செய்து தரப்பட்டது. அனைத்து வீடுகளுக்கும் சூரிய ஒளி மின்சார விளக்கு வசதி செய்து தரப்பட்டது. மலையில் தங்கும் அறை கட்டித்தரப்பட்டது. வாக்காளர்களாகிய நீங்கள் வேட்பாளர் ஏ.கே.பி.சின்ராஜுக்கு உதயசூரியன் சின்னத்தில் அதிகப்படியான வாக்குகளை அளித்து வெற்றி பெறச் செய்தால் புதுப்பட்டியில் இருந்து போதமலையில் உள்ள கெடமலைக்கு தார்சாலையும், வடுகம் பகுதியில் இருந்து மேலூருக்கு தார்சாலையும் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும். கீழூரில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைத்து குடிநீர் வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது வெண்ணந்தூர் ஒன்றிய குழு முன்னாள் துணைத்தலைவர் விஜயபாஸ்கர், போதமலை கனகராஜ், தேங்கல்பாளையம் ஊராட்சி செயலாளர் தமிழ்மணி, வெண்ணந்தூர் ஒன்றிய இளைஞர்அணி அமைப்பாளர் ரமேஷ், பேரூர் செயலாளர்கள் முருகவேல் (வெண்ணந்தூர்), கண்ணன் (அத்தனூர்), மூலக்காடு செந்தில் உள்பட மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story