மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் 15 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை - தஞ்சை தேர்தல் அதிகாரி பேட்டி


மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் 15 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை - தஞ்சை தேர்தல் அதிகாரி பேட்டி
x
தினத்தந்தி 6 April 2019 4:15 AM IST (Updated: 6 April 2019 1:33 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் 15 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது என்று தஞ்சை தேர்தல் அதிகாரி அண்ணாதுரை தெரிவித்தார்.

சுந்தரக்கோட்டை,

தஞ்சை நாடாளுமன்றத்திற்கு உட்பட்ட மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தஞ்சை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், தஞ்சை மாவட்ட கலெக்டருமான அண்ணாதுரை நேற்று மாலை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து மன்னார்குடி உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் 282 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. வாக்குப்பெட்டிகளை அனுப்புவதற்காக 25 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு தேர்தல் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் 3 பறக்கும் படை குழுக்கள் மற்றும் நிலையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் கோடைகாலம் என்பதால் வாக்குச்சாவடிகளில் குடிநீர், கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன், மாற்றுத்திறனாளிகள் எளிதாக வாக்களிக்கும் வகையில் சக்கர நாற்காலி வசதி செய்யப்பட்டுள்ளது. மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள 282 வாக்குச்சாவடிகளில் 15 மையங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. அவற்றை கண்காணிக்க துணை ராணுவ படையினர் நியமிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின்போது மன்னார்குடி உதவி கலெக்டர் புண்ணியகோட்டி, நகராட்சி ஆணையர் இளங்கோவன், தாசில்தார் லட்சுமிபிரபா உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story