கஜா புயலில் சிக்கி விசைப்படகுகள் நாசம், நிவாரணம் வழங்காவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு - மல்லிப்பட்டினம் மீனவர் சங்க கூட்டத்தில் தீர்மானம்


கஜா புயலில் சிக்கி விசைப்படகுகள் நாசம், நிவாரணம் வழங்காவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு - மல்லிப்பட்டினம் மீனவர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 6 April 2019 4:15 AM IST (Updated: 6 April 2019 1:33 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலில் சிக்கி விசைப்படகுகளை இழந்தவர்களுக்கு அரசு நிவாரணம் வழங்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க மல்லிப்பட்டினம் மீனவர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சேதுபாவாசத்திரம், 

கஜா புயல் தாக்கி 140 நாட்களுக்கு மேலாகியும் தஞ்சை மாவட்ட சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் ஆகிய பகுதிகளை சேர்ந்த விசைப்படகு மீனவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படாமல் சுமார் 15 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்தநிலையில் தஞ்சை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்கம், தமிழ்நாடு மீனவர் பேரவை, விசைப் படகு மீனவ நலசங்கம் ஆகிய சங்கங்களின் ஆலோசனை கூட்டம் நேற்று காலை மல்லிப்பட்டினம் துறைமுக ஏலக்கூட வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு விசைப்படகு மீனவர் பேரவை மாநில செயலாளர் அ.தாஜூதீன் தலைமை தாங்கினார். பகுதி சங்க பொறுப்பாளர்கள் சேதுபாவாசத்திரம் செல்வக்கிளி, விஜயன், மல்லிப்பட்டினம் மருதமுத்து, ராஜ்குமார், கள்ளிவயல்தோட்டம் சர்புதீன், இப்ராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டு கரை கடந்த கஜா புயலில் சிக்கி 188 விசைப்படகுகள் முற்றிலும் சேதமடைந்தது.

54 படகுகள் பாதி அளவு சேதமடைந்தது. தற்போது கட்டப்பட்டுவரும் புதிய துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைக்காமல் கட்டியதால்தான் பாலத்தில் மோதி படகுகள் நொறுங்கியது. அரசாணைப்படி முழு சேதமடைந்த படகுகளுக்கு ரூ.5 லட்சமும் பாதி சேதமடைந்த படகுகளுக்கு ரூ.3 லட்சமும் அரசு நிவாரணம் அறிவித்தது. பாதி சேதமடைந்த படகுகளுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுவிட்டது.

ரூ.5 லட்சத்துக்கு ஒரு பழைய படகை கூட வாங்க இயலாது. எனவே தற்போது உள்ள விலைவாசி உயர்வுக்கு ஏற்ப முழுமையாக சேதமடைந்த படகுகளுக்கு நிவாரணத்தை உயர்த்தி உடனடியாக வழங்க வேண்டும் என மீனவர்கள் பல்வேறு போராட்டங்களை அறிவித்தனர். ஆனால் தமிழக அரசு இதை ஏற்கவில்லை. மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் பகுதிகளில் முழுமையாக படகுகளை இழந்தவர்களுக்கு தற்போது வரை நிவாரணம் வழங்கப்படவில்லை.

எனவே படகுகளை இழந்த மீனவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்காவிட்டால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பது, மேலும் அரசை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி கிழக்கு கடற்கரை சாலைவழியாக ஊர்வலமாக சென்று ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றை மீன்வளத்துறை அலுவலகத்தில் ஒப்படைப்பது, வருகிற 12-ந் தேதி(வெள்ளிக்கிழமை) நாகை, காரைக்கால், திருவாரூர் உள்ளிட்ட கடலோர மாவட்ட மீனவர்களை மல்லிப்பட்டினத்தில் ஒன்று திரட்டி அவர்களையும் தேர்தல் புறக்கணிப்பு செய்ய வலியுறுத்தி ஆலோசனை கூட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Next Story