தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி: கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு கேட்டு கிராம மக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு


தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணி: கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு கேட்டு கிராம மக்கள் மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 6 April 2019 4:15 AM IST (Updated: 6 April 2019 1:35 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கீழப்பழுவூர்,

திருச்சியில் இருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை அகலப்படுத்தும் பணி கடந்த 2 ஆண்டுகளாக நடந்து வருகிறது. அதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடந்த ஆண்டு சாலையின் இரு புறங்களிலும் உள்ள நிலங்களை கையகப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த நெடுஞ்சாலை அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழப்பழுவூர், பொய்யூர், சிறுவலூர், புதுப்பாளையம் ஆகிய கிராமங்களின் பகுதிகளின் வழியாக செல்கிறது. கடந்த ஆண்டு இந்த கிராம மக்களிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்தி அதற்கான தொகையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்கினர்.

இதில் பொய்யூர் மற்றும் புதுப்பாளையம் கிராமத்தின் எல்லைக்குள் இருக்கும் நிலங்களுக்கு சென்ட் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வழங்கியுள்ளனர். ஆனால் இந்த இரு கிராமங்களுக்கும் இடையே உள்ள கிராமமான சிறுவலூர் பகுதியினருக்கு சென்ட் ஒன்றுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கியுள்ளனர். பக்கத்து கிராம பகுதி நிலங்களுக்கு சென்ட் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வழங்கி இருப்பதை கேள்விப்பட்ட சிறுவலூர் பகுதி மக்கள் எங்களுக்கு மட்டும் ஏன் சென்ட்டுக்கு வெறும் ரூ.6 ஆயிரம் கொடுத்தீர்கள் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டனர். அதற்கு அதிகாரிகள் சரிவர பதில் கூறவில்லை என்று கூறப்படுகிறது.

அதனை தொடர்ந்து அப்பகுதியினர் மாவட்ட நிர்வாகத்தினரிடமும், சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களிடமும் பல்வேறு முறை மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதியினர் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு கூடுதல் இழப்பீடு கேட்டு நேற்று திருச்சியில் இருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மருதையாற்று பாலத்தின் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கீழப்பழுவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து அதற்கான பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு பெற்றுக்கொள்ளலாம் என போலீசார் உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட சிறுவலூர் கிராம மக்கள் தற்காலிகமாக சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் திருச்சி- சிதம்பரம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
1 More update

Next Story