“தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது” உதயநிதி ஸ்டாலின் பேச்சு


“தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை வீசுகிறது” உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 6 April 2019 4:00 AM IST (Updated: 6 April 2019 1:36 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் மோடி எதிர்ப்பு அலை வீசி வருவதாக, திரைப்பட நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

சிவகிரி,

தென்காசி நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் தனுஷ்குமாரை ஆதரித்து, திரைப்பட நடிகர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை சிவகிரியில் பிரசாரம் செய்தார். பஸ்நிலையம் அருகே அவர் திறந்த வேனில் நின்றபடி பேசியதாவது:-

தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களின் பிரசாரத்துக்கு பொதுமக்கள் பெரும் திரளாக கலந்துகொண்டு வரவேற்பு கொடுக்கிறார்கள். எனக்கே இப்படி என்றால் நமது தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்கள் அனைத்தும் மாநாடு போல் நடக்கிறது. இங்கே காணுகின்ற கூட்டங்கள் மோடியின் செய்கைக்கு எதிர்ப்பாக வீசுகின்ற அலையா? அல்லது மக்கள் தி.மு.க தலைவர் ஸ்டாலின் மீது வைத்திருக்கும் பாச அலையா? என என்னால் நம்ப முடியவில்லை.

மோடிக்கு இந்தியாவில் எங்கு போனாலும் எதிர்ப்பு அலை வீசுகிறது. அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் அதிகமாக வீசுகிறது. நாடாளுமன்ற தேர்தல் முடிந்து ஜனநாயக முற்போக்கு அரசு ஆட்சி பீடத்துக்கு வருமேயானால் விவசாயிகள் கடன் ரத்து செய்யப்படும். மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். கியாஸ் சிலிண்டர் விலை குறைக்கப்படும். உலக அளவில் பெட்ரோல் குறைந்து காணப்படுகிறது. ஆனால் இந்தியாவில் மட்டும்தான் விலை கூடிக்கொண்டே செல்கிறது.

அன்புமணி ராமதாஸ் என்னை எதிரியாக எண்ணி பேசி வருகிறார். நான் அவரை எங்கும் குறைத்து பேசவில்லை. உதயநிதி ஸ்டாலின் என்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? என்று கேட்கிறார். தேர்தல் முடிந்த பின்பு சந்திப்போம் என்று கூறிவிட்டேன். எனது முதல் விவாதம் சேலம் 8 வழிச்சாலை குறித்துதான். ஆனால் அவற்றை ஊழல் திட்டம் என கூறியதே அவர் தான். அன்புமணி ராமதாஸ் 40 தடவை மட்டுமே நாடாளுமன்றத்துக்கு சென்றிருக்கிறார். அதனால் வாக்களித்து தேர்ந்தெடுத்த தர்மபுரி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி என்றுமே அவரது வாழ்க்கையில் இவ்வாறு பிரசாரம் செய்தது கிடையாது. அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்-அமைச்சராக வரவில்லை. சசிகலாவின் காலடியில் கைக்குழந்தை போல் தவழ்ந்து கீழே விழுந்து பெற்ற பரிசுதான் முதல்வர் பதவி. ஆகவே வாக்காளர்களாகிய நீங்கள் அனைவரும் எதிர்காலத்தை நன்கு சிந்தித்து ஜனநாயக முற்போக்கு கூட்டணி வேட்பாளர் தனுஷ்குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் அளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக தேர்தல் பொறுப்பாளர் கருப்பசாமி பாண்டியன், நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், மாநில செயற்குழு உறுப்பினர் சவுக்கை சீனிவாசன் உள்பட அவரை வரவேற்றனர்.

Next Story