வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவதற்காக வாக்காளர் பட்டியல் பிரிக்கும் பணி தீவிரம்


வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவதற்காக வாக்காளர் பட்டியல் பிரிக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 6 April 2019 4:30 AM IST (Updated: 6 April 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவதற்காக வாக்காளர் பட்டியல் பிரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

பெரம்பலூர்,

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் வருகிற 18-ந் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு பெரம்பலூர் தொகுதியில் வேட்பாளர்களின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் பெரம்பலூர் (தனி), பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிக்கும், குன்னம், சிதம்பரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்கும் உட்பட்டவையாகும்.

இந்நிலையில் பெரம்பலூர் (தனி), குன்னம் ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு எந்திரங்கள், இந்த தேர்தலில் முதல் முறையாக பயன்படுத்தப்படவுள்ள வாக்காளர்களின் வாக்குப்பதிவினை உறுதி செய்யும் எந்திரங்கள் ஆகியவை பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதில் குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 320 வாக்குச்சாவடிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்குப்பதிவினை உறுதி செய்யும் எந்திரங்கள் பிரிக்கப்பட்டு குன்னம் தாலுகா அலுவலகத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டது.

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. மேலும் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெரம்பலூர்- குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது.

அதனை சட்டமன்ற தொகுதி வாரியாக வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவதற்கான பணியில் தேர்தல் அலுவலர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகள் முடிந்தவுடன் அந்தந்த தாலுகா அலுவலகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு சென்று, அங்கிருந்து வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story