நாடாளுமன்ற தேர்தல்: கொளுத்தும் வெயிலில் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரம்


நாடாளுமன்ற தேர்தல்: கொளுத்தும் வெயிலில் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரம்
x
தினத்தந்தி 6 April 2019 3:40 AM IST (Updated: 6 April 2019 3:40 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலையொட்டி கொளுத்தும் வெயிலில் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

பெங்களூரு,

நாடாளுமன்ற தேர்தல் கர்நாடகத்தில் 2 கட்டங்களாக வருகிற 18, 23-ந் தேதி நடக்கிறது. கர்நாடகத்தில் பெங்களூரு தெற்கு, பெங்களூரு வடக்கு, மத்திய பெங்களூரு, பெங்களூரு புறநகர், கோலார், சிக்பள்ளாப்பூர், துமகூரு, சாம்ராஜ்நகர், மைசூரு, மண்டியா, ஹாசன், சித்ரதுர்கா, தட்சிண கன்னடா, உடுப்பி-சிக்கமகளூரு ஆகிய 14 தொகுதிகளில் வருகிற 18-ந் தேதி முதல்கட்ட தேர்தல் நடக்கிறது.

இந்த தொகுதிகளில் மனு தாக்கல் முடிவடைந்து, தேர்தல் களத்தில் 241 வேட்பாளர்கள் உள்ளனர். பகிரங்க பிரசாரம் செய்ய, இன்னும் 11 நாட்கள் உள்ளன. தேசிய அளவிலான முதல்கட்ட தேர்தல் வருகிற 11-ந் தேதி நடக்கிறது. அந்த தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பிரசாரம் நடத்தி வருகிறார்கள்.

பிரதமர் மோடி

அதனால், தேசிய தலைவர்கள் இன்னும் கர்நாடகத்தில் பிரசாரம் செய்ய தொடங்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா பெங்களூருவில் அரை மணி நேரம் பேரணி நடத்திவிட்டு சென்றார். இன்னும் முழுமையான பிரசாரத்தை அவர் கர்நாடகத்தில் தொடங்கவில்லை.

பிரதமர் மோடி வருகிற 9-ந் தேதி கர்நாடகத்தில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) மற்றும் பா.ஜனதா கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சித்தராமையா

பா.ஜனதா சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் எடியூரப்பா, காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோரும், ஜனதா தளம்(எஸ்) சார்பில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா, முதல்-மந்திரி குமாரசாமி ஆகியோரும் பிரசாரம் செய்து வருகிறார்கள்.

சித்தராமையா நேற்று பெங்களூரு வடக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான மந்திரி கிருஷ்ண பைேரகவுடாவை ஆதரித்து பிரசாரம் செய்தார். கே.ஆர்.புரம், மல்லேசுவரம், பெரியார் நகர், சகாயபுரம், புலிகேசிநகர், ஹெப்பால் உள்ளிட்ட பகுதிகளில் அவர் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.

தேவேகவுடா

உடுப்பி-சிக்கமகளூரு தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) வேட்பாளரான முன்னாள் மந்திரி பிரமோத் மத்வராஜை ஆதரித்து முதல்-மந்திரி குமாரசாமி பிரசாரம் செய்தார். மங்களூருவில் அவர் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினார்.

அதே போல் மண்டியா தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) சார்பில் போட்டியிடும் நிகில் குமாரசாமி தனக்கு ஆதரவு திரட்டினார். முன்னாள் பிரதமர் தேவேகவுடா துமகூரு தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து தனக்கு வாக்கு சேகரித்தார்.

நடிகை சுமலதா

மண்டியா தொகுதியில் பா.ஜனதா ஆதரவு பெற்ற சுயேச்சை வேட்பாளர் நடிகை சுமலதா தனக்கு ஆதரவு திரட்டினார். கோடையின் கொளுத்தும் வெயிலிலும் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களின் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு தீவிரமாகஆதரவு திரட்டினர். அடுத்து வரும் நாட்களில் கட்சிகளின் தேசிய தலைவர்களும் வரவுள்ளதால், பிரசார களம் மேலும் பரபரப்பாகும்.
1 More update

Next Story