மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமையும் போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் ப.சிதம்பரம் பேச்சு


மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமையும் போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் ப.சிதம்பரம் பேச்சு
x
தினத்தந்தி 5 April 2019 11:00 PM GMT (Updated: 5 April 2019 10:24 PM GMT)

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் போது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பேசினார்.

திருப்புவனம்,

திருப்புவனம் அருகே லாடனேந்தல், கீழடி, மானாமதுரை அருகே வெள்ளிக்குறிச்சி, ராஜகம்பீரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து பேசினார். லாடனேந்தலில் அவர் பேசியதாவது:– நாடாளுமன்ற தேர்தல், மானாமதுரை சட்ட மன்ற இடைத்தேர்தல் ஆகியவை நடைபெற உள்ளன. இந்த தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது, வாக்காளர்களாகிய உங்கள் கையில் உள்ளது.

தமிழ்நாட்டில் பா.ஜ.க கால் ஊன்ற முடியவில்லை. தற்போது அ.தி.மு.க மூலம் கூட்டணி வைத்து கால் ஊன்ற முயற்சி செய்கிறது. இந்த தேர்தல் முடிந்து அறிவிப்பு வரும் போது கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, புதுச்சேரி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க.விற்கு பூஜ்யம் தான் கிடைக்கும். வடநாட்டில் ஆட்சி செய்யும் மாநிலங்களில் எப்போது கலவரம் வெடிக்கும் என்று தெரியாது. தமிழ்நாட்டில் கலவரம் வராமல் இருப்பதற்கு பா.ஜ.க.விற்கு எதிராக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப்படும் என்று பிரதமர் மோடி கூறினார்.

ஆனால் தற்போது அந்த 5 ஆண்டுகள் முடிந்து விட்டன. ஆனால் வங்கி கணக்கில் பணம் தான் போடவில்லை. ஆண்டிற்கு 2 கோடி பேர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்று கூறினர். ஆனால் அவர்கள் கூறியபடி வழங்கவில்லை. தற்போது அவர்கள் ஆட்சி முடியும் தருவாயில் இளைஞர்களை பக்கோடா விற்க சொல்கிறார். கடந்த 5ஆண்டுகளில் 4.7 கோடி பேர் வேலையில்லாமல் உள்ளனர். திருப்பூரில் 5 ஆயிரம் சிறு தொழிற்சாலைகள் நடைபெற்று வந்தது.

தற்சமயம் 500 கம்பெனிகள் மட்டும் இயங்கி வருகிறது. பா.ஜ.க ஆட்சியில் விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. ஆனால் விதை, பூச்சி மருந்து ஆகியவற்றின் விலை 2 மடங்காக உயர்ந்துள்ளது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஆட்சிக்கு வந்து 9 மாதத்தில் 24 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்றும், ஒவ்வொரு பஞ்சாயத்திற்கும் மக்கள் தொண்டன் என்று புதிதாக வேலைவாய்ப்பு உருவாக்கி 10 லட்சம் பஞ்சாயத்துகளில் இந்த பணியை நடைமுறைக்கு கொண்டு வரப்படும். தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் படிக்கும் வகையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும்.

எல்லா மாவட்டங்களிலும் ஒரு விவசாய கல்லூரி, கால்நடை கல்லூரி ஆகியவை உருவாக்கப்படும். வறுமைக்கோட்டின் கீழ் ஏழ்மையான குடும்பங்களுக்கு மாதந்தோறும் ரூ.6ஆயிரம் வீதம் ரூ.72ஆயிரம் வழங்கப்படும். இதனால் பல லட்ச ஏழை குடும்பங்கள் பயனடையும். அ.தி.மு.க. பழைய கட்சி போல் இல்லாமல் இ.பி.எஸ்., ஒ.பி.எஸ், டி.டிவி என 3 பிரிவுகளாக உள்ளது.

டெல்லியில் காங்கிரஸ் கட்சி தலைமையில் ஆட்சி அமையும் போது தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். எனவே மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களான சிவகங்கை தொகுதி வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் மற்றும் மானாமதுரை சட்ட மன்ற வேட்பாளர் கரு.இலக்கியதாசன் ஆகியோருக்கு ஆதரவு தந்து வெற்றி பெறச் செய்ய கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் கூட்டணி கட்சியினர் கலந்துகொண்டனர்.


Next Story