“வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி அரசை வீட்டுக்கு அனுப்புங்கள்” முத்தரசன் பேச்சு


“வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி அரசை வீட்டுக்கு அனுப்புங்கள்” முத்தரசன் பேச்சு
x
தினத்தந்தி 6 April 2019 4:30 AM IST (Updated: 6 April 2019 4:08 AM IST)
t-max-icont-min-icon

வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

சிவகாசி,

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சிவகாசி பைபாஸ் ரோட்டில் பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூருக்கு வாக்குகள் கேட்டு இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது:–

சிவகாசி பகுதியில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சக தொழில்கள் சிறிது, சிறிதாக அழிந்து வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் ஒரு குடம் குடிநீர் ரூ.5–க்கு விற்பனையாகிறது. பிரதமர் நரேந்திரமோடி தான் ஆட்சிக்கு வந்தால் 100 நாளில் கருப்பு பணம் அனைத்தும் மீட்கப்படும், ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்றார். ஆனால் அவர் கூறியது எதையும் செய்யவில்லை. 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வசதி ஏற்படுத்தி தரப்படும் என்றார். அதுவும் நடக்கவில்லை. வாக்குறுதியை நிறைவேற்றாத மோடி அரசை வீட்டுக்கு அனுப்புங்கள்.

சிவகாசியில் 8 லட்சம் தொழிலாளர்கள் உள்ள பட்டாசு தொழிலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை பற்றி மோடி அரசு கவலைப்படவில்லை. பட்டாசு தொழிலை காப்பாற்ற வேண்டும் என்றால் பொதுமக்கள் மாணிக்கம்தாகூருக்கு கை சின்னத்தில் வாக்களிக்கவேண்டும். ரூ.500, ரூ.1000 நோட்டுகளை மதிப்பு இழக்க செய்ததால் 300 பேர் வரை இறந்துள்ளனர். அதேபோல் ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பல சிறு,குறு தொழில்கள் காணாமல் போயின. வணிகம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் ஏற்பட்டுள்ள இழப்புகளை குறும்படமாக தயாரித்த சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் போய் ஒரு மாதம் ஆகிறது. அவரை கண்டுபிடிக்க இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முகிலன் எங்கே? இதற்கு முதல்–அமைச்சர் பதில் கூற வேண்டும்.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்து ஆறுதல் கூறிய அனைத்துக்கட்சி தலைவர்கள் மீதும் இந்த அரசு வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வை மிரட்டி தான் பா.ஜ.க. 5 இடங்களை பெற்றுள்ளது. ஏப்ரல் 18–ந்தேதி நீங்கள் அளிக்கும் ஒரு ஓட்டில் தான் மோடி அரசும், எடப்பாடி அரசும் வீட்டுக்கு போகும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story