ஜூகு கல்லியில் போலீசாரை தாக்கியதாக நடைபாதை வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு


ஜூகு கல்லியில் போலீசாரை தாக்கியதாக நடைபாதை வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 5 April 2019 10:38 PM GMT (Updated: 2019-04-06T04:08:37+05:30)

ஜூகு கல்லியில் போலீசாரை தாக்கியதாக நடைபாதை வியாபாரிகள் மீதுபோலீசார்வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மும்பை,

மும்பை அந்தேரி, கில்பர்ட் ஹில் ரோட்டில் ஜூகு கல்லி அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள நடைபாதை கடைகளை அப்புறப்படுத்த நேற்று முன்தினம் இரவு மாநகராட்சியினர் போலீசாருடன் சென்றனர். இதில், மாநகராட்சியினர் நடைபாதை கடைகளை அப்புறப்படுத்திய போது வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்கள் பாதுகாப்பு பணிக்கு சென்று இருந்த போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் திடீரென போலீசாரை தாக்க தொடங்கினர். இதில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் காயமடைந்தார்.

இதையடுத்து போலீசார் சில நடைபாதை வியாபாரிகளை பிடித்து சென்றனர். மேலும் போலீசாரை தாக்கியதாக நடைபாதை வியாபாரிகள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

வீடியோ பரவியது

இந்தநிலையில் நடைபாதை வியாபாரிகளை போலீசார் தாக்குவது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறும்போது:-

கடந்த 2016-ம் ஆண்டு ஜூகு கல்லியில் உள்ள மருந்து கடையில் தீ விபத்து ஏற்பட்டு 9 பேர் பலியாகினர். அந்த பகுதியில் இருந்த நடைபாதை கடைகளால் தான் தீயணைப்பு துறையினர் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்க முடியாமல் போனது.

இதுபோன்ற சம்பவங்களை தடுக்கவே நடைபாதை கடைகளை அப்புறப்படுத்த சென்றோம். அப்போது வியாபாரிகள் தான் போலீசாரை தாக்கினர். நாங்கள் தற்காத்து கொள்ளவே அப்படி நடந்து கொண்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story