‘‘கூட்டணிக்கு வேண்டாம் என்றவர்கள், ராஜ் தாக்கரே ஆதரவை நாடுகிறார்கள்’’ காங்கிரஸ் மீது சரத்பவார் அதிருப்தி
‘‘கூட்டணிக்கு வேண்டாம் என்றவர்கள், ராஜ் தாக்கரேயின் ஆதரவை நாடுகிறார்கள்’’ என காங்கிரஸ் மீதான அதிருப்தியை சரத்பவார் வௌிப்படுத்தி உள்ளார்.
மும்பை,
நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே மத்திய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்து வருகிறார். எனவே பா.ஜனதாவுக்கு எதிரான மெகா கூட்டணியில் நவநிர்மாண் சேனாவை கொண்டு வர தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் முயற்சி செய்தார்.
ஆனால் ராஜ்தாக்கரேயை கூட்டணிக்கு கொண்டு வர காங்கிரஸ் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. இதனால் சரத்பவாரின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
ராஜ் தாக்கரே பிரசாரம்
எனினும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாத ராஜ் தாக்கரே பா.ஜனதாவுக்கு எதிராக பல்வேறு இடங்களில் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். ராஜ் தாக்கரே மும்பையில் சஞ்சய் நிருபம் போட்டியிடும் வடமேற்கு மும்பை தவிர மற்ற எல்லா தொகுதிகளிலும் பா.ஜனதாவுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் மும்பைக்கு வெளியில் சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே, பேரன் பார்த் பவார், காங்கிரஸ் மாநில தலைவர் அசோக் சவான், முன்னாள் மத்திய மந்திரி சுஷில் குமார் ஷிண்டே, சமீர் புஜ்பால் ஆகியோர் போட்டியிடும் பாராமதி, மாவல், நாந்தெட், சோலாப்பூர், நாசிக் ஆகிய தொகுதிகளிலும் பா.ஜனதாவுக்கு எதிராக பொதுக்கூட்டம் நடத்த உள்ளார்.
சரத்பவார் அதிருப்தி
இந்தநிலையில் டி.வி. நிகழ்ச்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சரத்பவார் கூறியதாவது:-
மோடி அரசு கண்டிப்பாக முடிவுக்கு வரவேண்டும். அதை தான் ராஜ் தாக்கரேவும் விரும்புகிறார். இது குறித்து நான் அவரிடம் பல முறை பேசி உள்ளேன். ராஜ் தாக்கரேவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமில்லை. ஆனால் அவர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார். அவர் தற்போது பா.ஜனதாவுக்கு எதிராக பிரசாரம் செய்தால் நிச்சயம் அது எங்களுக்கு பலனை தரும். அவருக்கு என ஒரு கொள்கையும், பார்வையும் இருக்கும். நாங்கள் அவருடன் தொடர்பில் இருக்கிறோம்.
காங்கிரஸ், நவநிர்மாண் சேனாவை கூட்டணியில் சேர்க்க விரும்பவில்லை. ஆனால் தற்போது அவர்களுக்கு ஆதரவாக ராஜ் தாக்கரே பொதுக்கூட்டம் நடத்த வேண்டும் என கேட்கிறார்கள். காங்கிரஸ், நவநிர்மாண் சேனாவை கூட்டணியில் சேர்த்திருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story