கடலூரில், சுட்டெரிக்கும் வெயிலில் பொது மக்களின் தாகம் தணிக்கும் போலீஸ் ஏட்டு - சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிகிறது

மோட்டார் சைக்கிளில் கேன் வைத்து பொதுமக்களுக்கு இலவசமாக கடலூர் போக்குவரத்து போலீஸ் ஏட்டு குடிநீர் வழங்கி வருகிறார். அவருக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டு குவிகிறது.
கடலூர்,
கோடை காலங்களில் மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் நகரங்களில் முக்கிய பகுதிகளில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தண்ணீர் பந்தல் வைக்கப்படுவது வழக்கம். அதாவது மார்ச் மாத தொடக்கத்திலேயே தண்ணீர் பந்தல்கள் அமைக்கும் பணியை தொடங்கி விடுவார்கள். ஆனால் தற்போது தேர்தல் காலம் என்பதால் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி காரணமாக தண்ணீர் பந்தல் என்பது இதுவரையில் எங்கும் திறக்கப்படவில்லை.
சுட்டெரிக்கும் வெயில், அனல் பறக்கும் அரசியல் கட்சியினரின் தேர்தல் பிரசாரத்திற்கு இடையே பல இடங்களில் மக்கள் குடிநீர் கிடைக்காமல் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். சாலையில் கால்கடுக்க நடந்து செல்பவர்கள் தங்களது தாகத்தை போக்குவதற்கு கூட தண்ணீர் கிடைக்காமல் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். இலவசமாக கிடைத்த தண்ணீர் தேர்தலின் காரணமாக பணம் கொடுத்து கடைகளில் வாங்கி குடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.
இந்த நிலையில் இதுபோன்ற நிலையை போக்கும் விதமாக கடலூரில் ஒரு போலீஸ்காரர் புதிய முயற்சியை கையில் எடுத்து இருக்கிறார். கடலூர் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருபவர் மணிகண்ணன் (வயது 42). இவர் நேற்று கடலூர் லாரன்ஸ்ரோடு பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வேலையில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த அவரது மோட்டார் சைக்கிளில் காவல் இலவச குடிநீர் என்று எழுதப்பட்ட குடிநீர் கேன் ஒன்று கட்டப்பட்டு இருந்தது. அதன் மூலம் அந்த வழியாக தாகத்துடன் செல்லும் மக்களுக்கு அவர் குடிநீரை இலவசமாக வழங்கினார்.மேலும் அந்த வழியாக சென்ற கார், ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் இலவசமாக குடிநீர் வழங்கினார். கோடை வெயில் கொளுத்தி வரும் வேளையில் குடிநீருக்காக பாதசாரிகள் சிரமப்பட்டு வந்தனர். அவர்கள் குடிநீர் பாட்டில் வாங்க ரூ.30 வரை செலவழிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் அவர்களுக்கு உதவும் வகையில் போலீஸ் ஏட்டு மணிகண்ணன் எடுத்துள்ள இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகிறார்கள். மோட்டார் சைக்கிளில் இவர் தண்ணீர் கேனை கட்டி வைத்துள்ளதால், இவர் எந்த பகுதியில் எல்லாம் போக்குவரத்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளாரோ அந்த பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருக்கும் இவரது மோட்டார் சைக்கிளில் இருந்து தண்ணீரை பிடித்து மக்கள் பருகி தங்களது தாகத்தை போக்கி கொள்ள முடியும்.
தனது சொந்த செலவில் இந்த முயற்சியை எடுத்துள்ள ஏட்டு மணிகண்ணன் கூறுகையில், நேற்று தான் இந்த முயற்சியை கையில் எடுத்தேன், முதல் நாளிலேயே 2 கேன் தண்ணீர் காலியாகிவிட்டது என்று அவர் தெரிவித்தார்.
இவரின் மனித நேய செயல் புகைப்படம் மற்றும் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் உலா வருகிறது. இதை பார்த்தவர்கள் போலீஸ் ஏட்டு மணிகண்ணனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பாராட்டும் குவிந்த வந்த வண்ணம் இருக்கிறது.
Related Tags :
Next Story






