மாவட்ட செய்திகள்

சாதி, மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்களுக்கு மக்கள் தக்க பதிலடி தருவார்கள் - கள்ளக்குறிச்சி பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு + "||" + Caste and religion are politicians in the name of People will respond

சாதி, மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்களுக்கு மக்கள் தக்க பதிலடி தருவார்கள் - கள்ளக்குறிச்சி பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு

சாதி, மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்களுக்கு மக்கள் தக்க பதிலடி தருவார்கள் - கள்ளக்குறிச்சி பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
சாதி, மதத்தின் பெயரால் அரசியல் செய்பவர்களுக்கு மக்கள் தக்க பதிலடி தருவார்கள் என்று கள்ளக்குறிச்சியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசினார்.
கள்ளக்குறிச்சி, 

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் டாக்டர் பொன்.கவுதமசிகாமணியை ஆதரித்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது. இதற்கு முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பேராயர் எஸ்.ரா.சற்குணம், தி.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் அங்கையற்கண்ணி வரவேற்றார். இதில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, பொன்.கவுதமசிகாமணிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கள்ளக்குறிச்சி இன்று மக்கள் குறிச்சியாக மாறி இருப்பதை நான் பார்க்கிறேன். திரும்பும் திசையெல்லாம் மக்கள் திரண்டு வந்துள்ள எழுச்சியை நான் காண்கிறேன். மத்தியில் நடக்கும் ஆட்சியை அகற்றிட வேண்டும், மாநிலத்தில் நடக்கும் ஆட்சியை அப்புறப்படுத்த வேண்டும் என்பதற்காக திரண்டு உள்ளர்கள்.

மத்தியில் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ராகுல்காந்தி பிரதமராக அமரும் நேரத்தில் ஒரே நொடியில் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி தூக்கி எறியப்படும். மோடியும், எடப்பாடியும் ஒருநாள் கூட பதவியில் தொடர யோக்கியம் இல்லாத நிலையில் உள்ளனர். நாட்டு மக்களையும், அவர்களது பிரச்சினைகள் குறித்தும் அவர்கள் சிந்திப்பது இல்லை.

சர்வாதிகாரி, உதவாக்கரையாக உள்ளவர்களை தூக்கி எறிவதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுதான் வருகிற 18-ந்தேதி என்பதை நீங்கள் நிலை நிறுத்தி கொள்ளுங்கள். சாதாரண, சாமானிய மக்கள் பற்றி இவர்கள் கவலைப்படுவதில்லை.

கலைஞரை பொருத்தவரை ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் சாமானியர்களுக்காக குரல் கொடுத்து போராடி இருக்கிறார். ஆட்சி பொறுப்பில் இருந்தபோது பல்வேறு சாதனைகளை நிறைவேற்றி தந்துள்ளார்.

கலைஞர் சட்டப்பேரவையில் பேசிய கன்னிப்பேச்சே, குளித்தலை தொகுதி விவசாயிகளின் பிரச்சினையை தான் பேசினார். இதை ஏன் சொல்கிறேன் என்றால் விவசாயிகள் மீதும், சாமானிய மக்கள் மீதும் எந்த அளவுக்கு அவர் ஆர்வம், அக்கரை கொண்டிருந்தார் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டாகும்.

அண்ணாவின் மறைவுக்கு பின்னர் கலைஞர் ஆட்சி பொறுப்பேற்றார். அப்போது சொந்தமாக மனைகள் இல்லாமல் குடியிருக்கும் விவசாய தொழிலாளர்களுக்கு அவர்கள் குடியிருக்கும் மனையே சொந்தமாகும் என்கிற சட்டத்தை கொண்டுவந்தார்.

விவசாயிகள் தொழிலாளர்கள், பாட்டாளிகள், ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக நடத்தப்பட்ட ஆட்சிதான் கலைஞரின் ஆட்சி. ஒரு ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் தான் 5 முறை இருந்த கலைஞரின் ஆட்சி ஆகும். ஒரு ஆட்சி எப்படி இருக்க கூடாது என்பதற்கு உதாரணம் தான் எடப்பாடி தலைமையில் உள்ள அ.தி.மு.க. ஆட்சி.

சமூக நீதி திட்டங்களை கொண்டு வந்து பாதுகாத்த தலைவர் தான் கலைஞர். இன்று அ.தி.மு.க.வுடன் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பா.ம.க. இணைந்துள்ளது. அரசியல் ரீதியாக ஒரு கட்சி மாறுபாடு எடுப்பது தவறல்ல, அது எதார்த்தம். அதுபற்றி நான் விமர்சிக்க தயாராக இல்லை.

ஆனால் வன்னியர்களுக்கு தி.மு.க. என்ன செய்தது என்று ராமதாஸ் கேட்கிறார். தனிப்பட்ட முறையில் அவருக்கு நான் பதில் அளிக்க விரும்பவில்லை. ஏனெனில் டாக்டர் ராமதாஸ் கலைஞருக்கு அளித்த பாராட்டையே சாட்சியாக வைத்து கூறுகிறேன்.
2006-ம் ஆண்டு மார்ச் மாதம் 19-ந்தேதி கோனேரிகுப்பம் கிராமத்தில் வன்னியர் சங்க வெள்ளிவிழா மாநாடு நடந்தது. அதில் டாக்டர் ராமதாஸ், தலைவர் கலைஞருக்கு வெள்ளி செங்கோல் ஒன்றை பரிசாக கொடுத்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த 21 பேருக்கு நன்றி சொல்கிறேன். அடுத்து கலைஞருக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இட ஒதுக்கீட்டிற்காக நாங்கள் போராடினோம், போராடிக்கொண்டே இருந்தோம். அன்று முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரை சந்திக்க முயற்சி செய்தும் முடியவில்லை. பின்னர் கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் என்னை அழைத்து பேசினார். அதன்பிறகு இட ஒதுக்கீட்டை தருவதாக கூறி அதற்கான உத்தரவை கலைஞர் போட்டார். அதற்காக நன்றியை தெரிவிக்கிறேன் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், இடஒதுக்கீடு தரவில்லை என்றால் இன்று கூலி வேலை செய்துகொண்டு ஓட்டுப்போடுகிற ஒரு சமுதாயத்தை சேர்ந்தவராகவே இருந்து இருப்போம். அதை மாற்றிய பெருமை கலைஞரை சேரும் என்றும் பாராட்டியவர் டாக்டர் ராமதாஸ் ஆவார்.
இப்படி பேசிவிட்டு, இப்போது தி.மு.க. என்ன செய்தது என்கிறார். மேலும் இந்த தேர்தலோடு தி.மு.க. முடிந்து விடும் என்கிறார். இப்படி பேசுவது அவருக்கு வாடிக்கை, இதை கேட்பது மக்களுக்கு வேடிக்கையாகும்.

அவர் பல்வேறு சமயங்களில் அரசியல் நாகரிகம் இல்லாமல் பேசிவிட்டு, இப்போது நான் பேசுகிறேன் என்று ஊர் ஊராக அவர் பேசி வருகிறார். ஜெயலலிதா பற்றி உங்களை விட கேவலமாக பேசியவர் யாராவது உள்ளனரா?. அதையெல்லாம் இப்போது பேசி எனது கவுரவத்தை குறைத்துக்கொள்ள விரும்பவில்லை.

இப்போது அரசியல் லாபத்திற்காக போய் சேர்ந்து இருக்கலாம். அதற்காக வரலாறை மறைத்துவிட வேண்டாம். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு கலைஞர் என்ன செய்துள்ளார் என்பதை அந்த சமுதாயத்தை சேர்ந்த மக்கள் பாராட்டி கொண்டு இருக்கின்றனர். ராமதாசிடம் இருந்து பாராட்டு பத்திரத்தை எதிர்பார்க்க மாட்டோம், தேவையும் இல்லை.

மதம், சாதியினால் பிளவு ஏற்படுத்தி அரசியல் லாபம் பெறுபவர்களை மக்கள் அடையாளம் கண்டு கொண்டு இருக்கிறார்கள், அவர்களுக்கு மக்கள் தக்க பதிலடி தருவார்கள். இதற்காக வருகிற 18-ந்தேதி அந்த சாட்சியை நிரூபிக்க உள்ளனர்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் விவசாயிகள் பற்றி தான் அதிகமாக குறிப்பிட்டு, அவர்களுக்கு முக்கியத்துவத்தை வழங்கி உள்ளோம். அவர்களுக்கென்று தனி பட்ஜெட்டை வழங்க வாக்குறுதி தந்துள்ளோம். விளை நிலங்களை பாதுகாப்போம், குறைந்தபட்ச ஆதார விலைகளை நிர்ணயிப்போம், விவசாயிகள் கூட்டுறவு வங்கியில் வாங்கி உள்ள கடனை ரத்து செய்வோம் என்று ஏராளமானவற்றை தேர்தல் அறிக்கையில் சொல்லி உள்ளோம்.

பிரதமராக வர இருக்கிற ராகுல் காந்தி தேர்தல் அறிக்கையில் ஏழை குடும்பங்களுக்கு ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் அவரவர் வங்கி கணக்கில் முறையாக வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி தன்னை எம்.ஜி.ஆர் மாதிரி நினைத்து புறப்பட்டுள்ளார். உங்கள் ஆட்சி கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆட்சியில் என்ன செய்துள்ளோம் என்று சொல்லும் தெம்பு, திராணி, அவர்களுக்கு இருக்கிறதா?. அதேபோன்று தான் மத்தியில் பிரதமர் மோடி 5 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளார். அதை செய்துள்ளோம், இதை செய்தோம், செய்யப்போகிறோம் என்று சொல்லுங்கள். அதை விட்டுவிட்டு ஏதோ மத்தியில் இத்தனை நாளாக காங்கிரசும், இங்கு தி.மு.க.வும் ஆட்சியில் இருந்தது போன்று விமர்சிக்கிறார்.

நான் ஒரு விவசாயி என்றும், இந்த விவசாயி நாட்டை ஆளுவது ஸ்டாலினுக்கு பிடிக்கவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். விவசாயி நாட்டை ஆளும் போது அதை நான் மனப்பூர்வமாக ஆதரிப்பேன். ஆனால் அவர் ஒரு விஷவாயு. கஜாபுயல் அடித்து வாழ்வாதாரத்தை இழந்த அந்த மக்களை இந்த விவசாயி சந்தித்தாரா. எட்டு வழி சாலைக்கு எதிராக விவசாயிகள் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் 8 வழிச்சாலைக்கு ஆதரவாக தான் இந்த விவசாயி இருக்கிறார். விவசாயிகளின் தற்கொலைக்கு காரணமாக இருந்த எடப்பாடி பழனிசாமி, தன்னை விவசாயி என்று கூற அருகதை இல்லை.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ஒரு பிறந்த நாள் விழாவில் ஒரு ரவுடி வீச்சரிவாளால் கேக் வெட்டினார். அதேபோல் இன்று எடப்பாடியின் சொந்த மாவட்டமான சேலத்தில் ரவுடிகள் ஒன்று சேர்ந்து கத்தியால் கேக் வெட்டும் காட்சி வெளியாகி உள்ளது சட்டம்-ஒழுங்கு எப்படி உள்ளது என்பதை இதை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

பொள்ளாச்சியை விட கொடுமையான சம்பவம் நாட்டில் நடந்துள்ளதா. இதில் யார் பின்னால் இருந்து இயக்கினார்?. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன். நானும் தொடர்ந்து பேசுகிறேன் என் மீது வழக்குப்போடவில்லை. ஏனெனில் ஆதாரங்கள் அப்படி சிக்கி உள்ளது. 6 மாதத்திற்கு முன்பு பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்கள் காரில் பெண்களை கடத்தி சென்ற போது, தப்பிப்பதற்காக காரில் இருந்து குதித்த ஒரு பெண் இறந்துள்ளார். இதுவரையில் என்ன நடவடிக்கை எடுத்துள்ளர்கள். 7 ஆண்டுகளாக போலீசே அங்கு கிடையாதா. 7 ஆண்டுகளாக நடந்த இந்த கொடுமைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக தான் உங்களை தேடி நாடி வந்துள்ளேன்.

நமது குடும்பத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருந்தால் எப்படி துடிதுடித்து போய் இருப்போம். 200-க்கும் மேற்பட்ட பெண்களின் பெற்றோரின் நிலை என்ன என்று நினைத்து பாருங்கள். இதில் குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் தொடர்புடையவர்கள் யார் யார் என்று கண்டுபிடித்து அத்தனை பேரையும் சிறையில் போடுவது தான் தி.மு.க.வின் முதல் வேலை.

அதேபோல் தான் ஜெயலலிதாவின் இறப்பில் தொடர்புடையவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். ஜெயலலிதா பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவிக்கிறார். கொள்கை ரீதியில் கருத்துவேறுபாடு இருந்தாலும், நாட்டின் முதல்-அமைச்சர் அவர் என்பதாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதாலும் எனக்கும் சேர்த்து அவர்தான் முதல்-அமைச்சர். ஆகவே நான் பேசக்கூடாது என்று சொல்ல உங்களுக்கு தகுதி கிடையாது.

நான் பேசிதான் தீருவேன் என்பது மட்டுமல்ல, உண்மையாக உழைத்த அ.தி.மு.க. தொண்டனுக்காக இந்த பணியை நான் செய்ய தான் போகிறேன். கோடநாடு கொலைக்கு யார் காரணம் என்று மக்களிடம் கேட்கிறேன். இதற்கெல்லாம் முடிவு கட்டி, விடிவு காலத்தை ஏற்படுத்தி தருகிற சூழ்நிலையை ஏற்படுத்த உங்களிடம் வந்துள்ளேன்.

வாரிசுக்கு வாய்ப்புகள் கொடுக்கலாமா என்று செய்திகள் வருகிறது. தகுதியின் அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படுகிறார்கள். என்னை சொல்லவில்லையா, சொன்னவர்கள் என்ன நிலையில் உள்ளார்கள். ஏன் வாரிசுக்கு சீட் கொடுக்க கூடாது.

ஒரு சிறந்த செயல்வீரனை தான் தி.மு.க. தேர்ந்தெடுத்து, இந்த தொகுதியில் வேட்பாளராக டாக்டர் பொன்.கவுதமசிகாமணியை நிறுத்தியுள்ளோம். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தந்து மாபெரும் வெற்றியை தேடி தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன், மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் செல்வநாயகம், மாவட்ட அவைத்தலைவர் ராமமுர்த்தி, நகர செயலாளர் சுப்ராயலு, தி.மு.க. பிரமுகரும், தியாகதுருகம் மவுண்ட்பார்க் பள்ளி தாளாளருமான மணிமாறன், தலைமை கழக பேச்சாளர் வாஞ்சிநாதன், காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஜெய்கணேஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தனபால் மற்றும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் விழுப்புரம் வந்தார். அங்குள்ள கலைஞர் அறிவாலயத்தில் தங்கினார். 

தொடர்புடைய செய்திகள்

1. உள்ளூரில் நீரைச் சேமிக்க முடியாமல், நீர் சிக்கனம் அறிய இஸ்ரேல் போகிறேன் என்பது வேடிக்கையாக உள்ளது -மு.க.ஸ்டாலின்
உள்ளூரில் உள்ள நீரைச் சேமிக்க முடியாமல் கடலில் கலக்க அனுமதித்து விட்டு, நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேல் போகிறேன் என்பது வேடிக்கை மிகுந்த வினோதமாக இருக்கிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
2. அதிமுக ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டால், பாராட்டு விழா- மு.க.ஸ்டாலின்
வெளிநாடு சுற்றுப்பயணம் முடித்து நாடு திரும்பியிருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடு குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட்டால், பாராட்டு விழா நடத்த தயார் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3. அத்தியாவசிய பொருட்கள் பற்றி குறை கூறுவதா? ‘ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்யலாம்’ - அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி
அத்தியாவசிய பொருட்கள் பற்றி குறை கூறும் மு.க.ஸ்டாலின் ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து கொள்ளட்டும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
4. கருணாநிதிக்கு பின் ஸ்டாலின் வெற்றி தளபதியாக உள்ளார் -சி.பி.ராதாகிருஷ்ணன்
கருணாநிதிக்கு பின் ஸ்டாலின் வெற்றி தளபதியாக உள்ளார் என பாரதீய ஜனதா முன்னாள் அமைச்சர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசி உள்ளார்.
5. மொத்த முதலீட்டையும் தமிழகத்திற்கு கொண்டுவந்தால் முதல்வர் பழனிசாமிக்கு பாராட்டு விழா -மு.க.ஸ்டாலின்
மொத்த முதலீட்டையும் தமிழகத்திற்கு கொண்டுவந்தால் முதல்வர் பழனிசாமிக்கு திமுக பாராட்டு விழா நடத்த தயார் என மு.க.ஸ்டாலின் கூறினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை