“மீண்டும் பிரதமராக மோடியே வருவார்” திண்டுக்கல் பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு


“மீண்டும் பிரதமராக மோடியே வருவார்” திண்டுக்கல் பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு
x
தினத்தந்தி 6 April 2019 4:45 AM IST (Updated: 6 April 2019 4:34 AM IST)
t-max-icont-min-icon

மீண்டும் பிரதமராக மோடியே வருவார் என்று திண்டுக்கல்லில் நடந்த பிரசார கூட்டத்தில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.

திண்டுக்கல்,

நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி கட்சியான பா.ம.க. சார்பில் ஜோதிமுத்து போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக கூட்டணி கட்சியான தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் திண்டுக்கல் நாகல்நகரில் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களின் அன்பை பெற்ற விஜயகாந்த் நலமாக உள்ளார். விரைவில் அவர் மக்களை சந்திப்பார். நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பல தடங்கல்களுக்கு பிறகே இந்த கூட்டணி அமைந்துள்ளது. ஏனென்றால் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. கூட்டணி அமையக்கூடாது என்று தி.மு.க.வினர் பல்வேறு சூழ்ச்சிகளை செய்தனர். அத்தனையையும் முறியடித்தே இந்த மாபெரும் கூட்டணி உருவாகி உள்ளது.

எனவே அ.தி.மு.க. கூட்டணி கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளையும் கைப்பற்றும். அதற்கு சாட்சி இங்கு கூடியிருக்கும் மக்கள் கூட்டம். 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்ட உதயகுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அப்போது கூட்டணியில் இருந்த தே.மு.தி.க. 96 ஆயிரம் வாக்குகள் பெற்றது.

அதேபோல் இந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்து பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அவர் வெற்றி பெற்றால், உங்களின் நீண்ட நாள் கோரிக்கையான சிறுமலை வாழைப்பழத்துக்கு புவிசார் குறியீடு, திண்டுக்கல்லுக்கு புறநகர் பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.

அத்துடன் திண்டுக்கல்லும் ‘ஸ்மார்ட் சிட்டி’யாக மாற்றப்படும். ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக நினைத்தால், மத்திய அரசிடம் ஜி.எஸ்.டி.யை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வரிவிதிப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். 100 நாள் வேலை திட்டம் 200 நாள் வேலை திட்டமாக மாற்றப்படும். தி.மு.க. ஆட்சி காலத்தில் 15 மணி நேரத்துக்கு மேல் மின்வெட்டு இருந்தது. அதன் பிறகு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு மின்வெட்டு என்பதே இல்லாமல் ஆக்கியது.

அ.தி.மு.க. கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக மோடி உள்ளார். ஆனால் தி.மு.க., காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினரால் தற்போது வரை பிரதமர் வேட்பாளரை அறிவிக்க முடியவில்லை. எனவே நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக மோடியே வருவார். அதே போல் உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க. கூட்டணியே வெற்றிக்கனியை பறிக்கும். எனவே பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்துவுக்கு மாம்பழம் சின்னத்தில் வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார். பிரசார நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் மருதராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story