பொள்ளாச்சி அருகே, 9 வயது மாணவி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் வளர்ப்பு தந்தை மீது வழக்கு


பொள்ளாச்சி அருகே, 9 வயது மாணவி பாலியல் பலாத்காரம் - போக்சோ சட்டத்தில் வளர்ப்பு தந்தை மீது வழக்கு
x
தினத்தந்தி 6 April 2019 5:00 AM IST (Updated: 6 April 2019 4:35 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே 9 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வளர்ப்பு தந்தை மீது போக்சோ சட்டத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

பொள்ளாச்சி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 9 வயது சிறுமி அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். எப்போதும் சுறுசுறுப்பாக காணப்படும் அந்த மாணவி சோர்வாக இருந்தார். இது குறித்து பள்ளி ஆசிரியை அந்த மாணவியிடம் கேட்டதற்கு, தனது வளர்ப்பு தந்தை தன்னை அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியை, கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் புகார் கொடுத்தார். உடனே குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் பள்ளிக்கு வந்து, அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் அந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ரெக்சிலின் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

விசாரணையில் அந்த மாணவிக்கு 2 வயது இருக்கும் போது, தாய் கணவரை பிரிந்து வந்து விட்டார். பின்னர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இன்னொருவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். அவர் அந்த மாணவிக்கு வளர்ப்பு தந்தையானார். இதற்கிடையில் அந்த மாணவியின் தாய் சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் பாட்டியுடன் அந்த மாணவி வசித்து வருகிறார். குடிப்பழக்கம் அதிகம் உள்ள வளர்ப்பு தந்தை, கடந்த 4 மாதங்களாக 9 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

இதை எப்படி வெளியில் சொல்வது என்று தெரியாமல் தவித்த மாணவியிடம் ஆசிரியர்கள் விசாரித்த போது நடந்த சம்பவம் வெளியில் தெரியவந்தது. தற்போது வளர்ப்பு தந்தை தலைமறைவாகி விட்டார். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து வளர்ப்பு தந்தையை வலைவீசி தேடி வருகின்றனர். 

Next Story