நடத்தையில் சந்தேகம்: பெண் குத்தி கொலை; கணவர் வெறிச்செயல்


நடத்தையில் சந்தேகம்: பெண் குத்தி கொலை; கணவர் வெறிச்செயல்
x
தினத்தந்தி 6 April 2019 4:36 AM IST (Updated: 6 April 2019 4:36 AM IST)
t-max-icont-min-icon

வானூர் அருகே நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கத்திரிக்கோலால் குத்தி கட்டிட தொழிலாளி கொலை செய்தார். மகன் கண்முன்னே இந்த கொடூர கொலை சம்பவம் நடைபெற்றது.

வானூர்,

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா மாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வரங்கம் (வயது 35), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி நதியா (30). இவர்களுக்கு லோகேஷ் (11), கமலேஷ் (10) என்று 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் நதியாவின் நடத்தையில் செல்வரங்கம் சந்தேகப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மாலையும் அவர்களுக்கு இடையே மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த செல்வரங்கம், நதியாவை வீட்டில் இருந்த கத்தரிக்கோலால் கழுத்தில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சரிந்து விழுந்தார். அப்போது 2-வது மகன் கமலேஷ் வீட்டில் இருந்தான். தனது கண் முன்னே தாய் கொலை செய்யப்பட்டதை பார்த்த அவன், கதறி அழுதபடி வீட்டை விட்டு வெளியே வந்தான். இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் சம்பவம் நடந்த இடத்துக்கு வந்தனர். இதை அறிந்த செல்வரங்கம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த நதியாவை, உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுவை கனகசெட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்துபோனார்.

இதுபற்றி தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் பிம்ஸ் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று நதியாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் பிணவறையில் வைக்கப்பட்டது.

இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய செல்வரங்கத்தை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story