ரூ.4¼ கோடி மோசடி: தனியார் நிதி நிறுவன அதிபர் கைது


ரூ.4¼ கோடி மோசடி: தனியார் நிதி நிறுவன அதிபர் கைது
x
தினத்தந்தி 5 April 2019 11:15 PM GMT (Updated: 2019-04-06T04:45:44+05:30)

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி ரூ.4¼ கோடிக்கு மேல் மோசடி செய்த நிதி நிறுவன அதிபரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி,

வேலூர் கிருஷ்ணா நகரில் ராயல் அக்ரோ டைரி லிமிடெட் என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது. இதன் கிளைகள் புதுவையில் நேரு வீதியிலும், காரைக்காலிலும் செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் புதுச்சேரியை சேர்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களும், காரைக்காலில் 200 மேற்பட்டவர்களும் சிறுசேமிப்பு திட்டம், மாத வைப்பு திட்டம், 5 ஆண்டு நிரந்தர வைப்பு திட்டத்தின் கீழ் சுமார் ரூ.4¼ கோடிக்கு மேல் முதலீடு செய்திருந்தனர்.

இந்த நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனம் கடந்த 2017-ம் ஆண்டு திடீரென மூடப்பட்டது. இதுகுறித்து வேல்ராம்பேட் பகுதியை சேர்ந்த தமிழ்செல்வன் (வயது 37) உள்பட ஏராளமானோர் புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் வேலூரில் இயங்கி வந்த தலைமை அலுவலகமும் மூடப்பட்டது தெரிய வந்தது. இதுதொடர்பாக வேலூர் போலீசார் நிதி நிறுவன அதிபரான வேலூர் கமலாட்சிபுரம் ஓட்டேரி சண்முகம் வீதியை சேர்ந்த தியாகராஜன், இயக்குனர் ராஜ்கமல் உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நிதி நிறுவன அதிபர் தியாகராஜனை வேலூரில் கைது செய்து புதுவை அழைத்து வந்தனர். பின்னர் அவரை புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Next Story