காட்பாடியில் கார் கண்ணாடியை உடைத்து கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் ரூ.12 ஆயிரம் பறிப்பு 2 பேருக்கு வலைவீச்சு


காட்பாடியில் கார் கண்ணாடியை உடைத்து கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் ரூ.12 ஆயிரம் பறிப்பு 2 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 6 April 2019 10:30 PM GMT (Updated: 2019-04-06T19:03:39+05:30)

காட்பாடியில் கார் கண்ணாடியை உடைத்து, கத்தியை காட்டி மிரட்டி வாலிபரிடம் ரூ.12 ஆயிரத்தை பறித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

காட்பாடி,

காட்பாடி பாறைமேடு அய்யப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுகன் (வயது 27). இவர், சம்பவத்தன்று திருவலம் சாலையில் காரில் அமர்ந்திருந்தார். அப்போது அங்கு 25 வயதுடைய வாலிபர்கள் 2 பேர் வந்தனர். அவர்கள் காரின் கதவை திறந்து சுகனை வெளியே இழுத்து, உன் முதலாளி எங்கே என கேட்டு மிரட்டினர். வந்தவர்கள் யார்? என்று தெரியாததால் பயந்து போன சுகன் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தார். அப்போது அவர்கள் சுகனை பிடித்து ஆபாசமாக பேசினர்.

பின்னர் இருவரும் சுகனிடம் உன்னிடம் இருக்கும் பணத்தை கொடுத்துவிடு என்றனர். ஆனால் அவர் பணத்தை கொடுக்க மறுத்தார். அப்போது அவர்கள் நாங்கள் யார் தெரியுமா? காட்பாடி பாரதிநகரை சேர்ந்த சீனிவாசன், தாராபடவேட்டை சேர்ந்த பலராமன் என்றும், ரவுடி ஜானிக்கு பின்னர் நாங்கள் தான் பெரிய ரவுடி என்றும் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் சுகனிடம் தற்போது உன்னிடம் இருக்கும் பணத்தை கொடுத்து விடு, இல்லை என்றால் கொன்று விடுவோம் என்று கூறி அவரது கழுத்தில் கத்தியை வைத்தனர். பின்னர் மர்மநபர்கள் காரின் பின்பக்க கண்ணாடியை உடைத்தனர். இதையடுத்து மர்ம நபர்கள் சுகனிடம் இருந்த 12 ஆயிரத்து 500 ரூபாயை பறித்தனர்.

கார் கண்ணாடி உடைக்கும் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்து இருவரையும் பிடிக்க முயன்றனர். அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த கண்ணாடி பாட்டில்களை உடைத்து பொதுமக்களை பார்த்து எங்களை பிடிக்க வந்தால் குத்தி கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து சுகன் காட்பாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் பறித்துச் சென்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story