தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி கடலூர் மாவட்டத்தில் 7 இடங்களில் இன்று நடக்கிறது
தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி கடலூர் மாவட்டம் முழுவதும் 7 இடங்களில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
கடலூர்,
நாடாளுமன்ற தேர்தலுக்காக கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணியில் 12 ஆயிரம் அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு முதல் கட்ட பயிற்சி வகுப்பு கடந்த மாதம் 24-ந்தேதி நடைபெற்றது. இந்த பயிற்சியை தொடங்கி வைத்து பார்வையிட்ட மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான அன்பு செல்வன் தேர்தல் பணிக்கு வராத நபர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், திட்டக்குடி ஆகிய 7 இடங்களில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை ஒரு பகுதியினருக்கும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றொரு பகுதியினருக்கும் என 2 பகுதியாக பயிற்சி நடக்கிறது.
கடலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி நடக்கிறது.
தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்களுக்கு தபால் ஓட்டுக்கான விண்ணப்ப படிவம் எண்-12 இன்று அந்தந்த பயிற்சி மையத்தில் வினியோகம் செய்யப்படுகிறது. உரிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து அவை சரியாக இருக்கும் பட்சத்தில் அந்த ஊழியர் தபால் ஓட்டு போடுவதற்கு பயிற்சி மையத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசு ஊழியரின் ஓட்டு வெளியூரில் இருந்தால் படிவம் எண் 12-ஐ சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு விண்ணப்பம் சரிபார்க்கப்பட்ட பின்னர் தபால் ஓட்டுக்கான படிவம் சம்பந்தப்பட்ட அரசு ஊழியருக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். அந்த படிவத்தை பெற்றுக்கொண்டு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அரசு ஊழியர்கள் வாக்களிக்கலாம் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story