“தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது” நெல்லை பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு


“தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது” நெல்லை பிரசாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
x
தினத்தந்தி 6 April 2019 11:15 PM GMT (Updated: 6 April 2019 8:42 PM GMT)

“வன்முறை கலாசாரத்தை கட்டவிழ்த்து விடுவது தி.மு.க.வினர்தான். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுகிறது” என்று நெல்லை பிரசாரத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

நெல்லை,

நெல்லை நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியனை ஆதரித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நெல்லையை அடுத்த தாழையூத்து பகுதியில் நேற்று மாலை பிரசாரம் செய்தார். அவர் திறந்த ஜீப்பில் சென்று இரட்டை இலை சின்னத்துக்கு ஆதரவு திரட்டினார். அப்போது அவர் பேசியதாவது:-

நெல்லை தொகுதி வேட்பாளராக மனோஜ் பாண்டியன் நிறுத்தப்பட்டு இருக்கிறார். அவர், பாரம்பரியமிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர். மனோஜ்பாண்டியன் தந்தை பி.எச்.பாண்டியனை பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள். அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோதும் சரி, டெல்லி மேல்-சபை உறுப்பினராக இருந்தபோதும் சரி மக்கள் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்ற குரல் கொடுத்தார். மனோஜ் பாண்டியனை தேர்வு செய்து நாடாளுமன்றத்துக்கு அனுப்பினால், உங்கள் தொகுதிக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.

ஜனநாயக நாட்டில் வாக்காளர்களே நீதிபதிகள். நீங்கள் தீர்ப்பு அளிக்கும் நேரம் வந்து விட்டது. நல்ல தீர்ப்பை அளிக்க வேண்டும் என உங்களை கேட்டு கொள்கிறேன். மறைந்த முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தமிழ்நாட்டில் நல்லாட்சி கொடுத்தனர். அவர்கள் எந்த அளவுக்கு சிறப்பான முறையில் ஆட்சி நடத்தினார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

ஜெயலலிதா தொலைநோக்கு திட்டங்களை தொடங்கினார். இந்த திட்டங்களை நிறைவேற்றும்போது எதிர்கால சந்ததியினர் வாழ்க்கை சிறப்பாக அமையும். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சேது சமுத்திர திட்டத்தில், கடலில் மணல் அள்ளப்பட்டது. அப்போது காங்கிரஸ் மந்திரிசபையில் தி.மு.க.வும். இடம்பெற்று இருந்தது. அப்போது ஜெயலலிதா, கடல் மணல் இயற்கையாகவே நகரும் தன்மை உடையது. நீங்கள் எவ்வளவு ஆழப்படுத்தினாலும் மணல் மூடி விடும் என்றார். அதேபோல் எந்திரம் மூலம் மணல் தோண்டி எடுக்கப்பட்ட இடத்தில் மீண்டும் மணல் மூடிவிட்டது. இதனால் மக்களின் வரி பணம் பல ஆயிரம் கோடி ரூபாய் வீணானது.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பு 17 ஆண்டுக்கு பிறகு கூறப்பட்டது. அப்போது தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் இருந்தது. ஆனால் இறுதி தீர்ப்பு அரசாணையில் வெளியிடப்படவில்லை. ஜெயலலிதா மீண்டும் முதல்-அமைச்சரான பிறகு போராடி இறுதி தீர்ப்பை அரசாணையில் வெளியிட்டார்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா நாட்டு மக்கள் நலம்பெற நல்ல பல திட்டங்களை அறிவித்தார். உணவு, உடை, இருப்பிடம் ஆகிய மூன்றும் மனிதர்களுக்கு அவசியம். அவற்றை மையமாக வைத்து ஜெயலலிதா திட்டங்களை தொடங்கினார். மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து பல தொல்லைகள் கொடுத்தார். அந்த எதிர்ப்புகளை எல்லாம் சமாளித்து ஜெயலலிதா பல திட்டங்களை அறிவித்தார்.

குறிப்பாக ஏழைகளுக்கு 20 கிலோ இலவச அரிசி, மகப்பேறு காலத்தில் பெண்களுக்கு ரூ.12 ஆயிரம் உதவித்தொகை, ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம், உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தொடங்கினார். அவர் வழியில் வந்த எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த அரசு அந்த திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. தாலிக்கு 4 கிராம் தங்கம், 8 கிராம் தங்கமாக உயர்த்தப்பட்டு உள்ளது. மகப்பேறு உதவித்தொகையை ரூ.18 ஆயிரமாக உயர்த்தி இருக்கிறோம். இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி அனைவருக்கும் வழங்கப்பட்டு உள்ளது.

60 லட்சம் தொழிலாளர்களுக்கு இலவசமாக வீடுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க முடிவு செய்தோம். அதை கூட வழங்க விடாமல் தி.மு.க.வினர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்று விட்டனர். தேர்தலுக்கு பின்னர் அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

அ.தி.மு.க. என்ற இயக்கத்தை எம்.ஜி.ஆர். 1978-ம் ஆண்டு தொடங்கினார். இந்த இயக்கத்தை ஜெயலலிதா வழிநடத்தினார். அவர் முதல்-அமைச்சராக இருந்து பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்காக நிறைவேற்றினார். 1½ கோடி உறுப்பினர்களை கொண்ட மிகப்பெரிய இயக்கம், ஆலமரம் போல் வளர்ந்து இருக்கிறது. இந்த இயக்கத்தை சுனாமியோ, பூகம்பமோ வந்தாலும் அசைக்க முடியாது. மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, அ.தி.மு.க.வை அழிக்க எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியவில்லை. மு.க.ஸ்டாலினால் அழிக்க முடியுமா? எந்த கொம்பன் வந்தாலும் அ.தி.மு.க. என்ற இயக்கத்தை அழிக்க முடியாது.

மு.க.ஸ்டாலின் பிரசார கூட்டத்தில் எங்களை தரக்குறைவாக விமர்சனம் செய்து வருகிறார். இதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும். வன்முறை கலாசாரத்தை கட்டவிழ்த்து விடுவது தி.மு.க.வினர்தான். பொதுமேடையில் தனிநபர் விமர்சனத்தை ஸ்டாலின் தவிர்க்க வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது. சாதி, மத மோதல்கள் இல்லை. சிறுபான்மை மக்கள் பாதுகாக்கப்படுகிறார்கள். நோன்பு காலத்தில் 4,500 மெட்ரிக் டன் அரிசி இலவசமாக வழங்கப்பட்டது. ஹஜ் புனித பயணம் மேற்கொண்ட 4 ஆயிரம் பேருக்கு மானியம் வழங்கப்பட்டு உள்ளது. உலமாக்கள் உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.

உங்கள் தொகுதிக்கு நல்ல வேட்பாளரை அறிமுகப்படுத்தி உள்ளோம். அவருக்கு நீங்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து மீண்டும் வெற்றி பெற செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

முன்னதாக, அவருக்கு நெல்லை கே.டி.சி. நகரில் நெல்லை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கட்சி நிர்வாகிகள் சால்வைகள் அணிவித்தும், பூங்கொத்து கொடுத்தும் வரவேற்றனர். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் ராஜலட்சுமி, எம்.பி.க்கள் முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த், கே.ஆர்.பி.பிரபாகரன், முருகையா பாண்டியன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் சுதா பரமசிவன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. தர்மலிங்கம், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட செயலாளர் அரிகர சிவசங்கர், ஜெயலலிதா பேரவை தலைவர் கணபதி சுந்தரம், செயலாளர் ஜெரால்டு, பகுதி செயலாளர் ஜெனி, பா.ஜனதா கட்சியின் நெல்லை தொகுதி பொறுப்பாளர் பாலாஜி கிருஷ்ணசாமி, பாட்டாளி மக்கள் கட்சி நெல்லை மாவட்ட தலைவர் சீயோன் தங்கராஜ், மாநில துணை பொதுச்செயலாளர் அன்பழகன், சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் நிசார் அலி, சமத்துவ மக்கள் கட்சி நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் சேவியர், தொகுதி பொறுப்பாளர் அழகேசராஜா, தமிழக மக்கள் முன்னேற்ற கழக நெல்லை மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன், த.மா.கா. மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன், சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர் ரமேஷ்செல்வன், வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாழையூத்தில் இருந்து பணகுடி புறப்பட்டு சென்றார். அங்கும் அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ் பாண்டியனை ஆதரித்து திறந்த ஜீப்பில் பிரசாரம் செய்தார். பின்னர் அவர் பிரசாரத்தை முடித்து விட்டு கன்னியாகுமரி புறப்பட்டு சென்றார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.15 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம், சங்கரன்கோவில் அருகே உள்ள சண்முகநல்லூரில் பிரசாரத்தை தொடங்குகிறார். அவர் தென்காசி தொகுதி புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ஆதரவு திரட்டுகிறார். தொடர்ந்து அவர் கரிவலம்வந்தநல்லூரில் பிரசாரம் செய்கிறார். பின்னர் அவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் புறப்பட்டு செல்கிறார். மாலையில் தூத்துக்குடி தொகுதி பா.ஜனதா வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜனை ஆதரித்து கோவில்பட்டியில் பிரசாரம் செய்கிறார். தொடர்ந்து அவர் எட்டயபுரம், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், கயத்தாறு ஆகிய இடங்களுக்கு சென்று தாமரை சின்னத்துக்கு ஆதரவு திரட்டுகிறார்.

Next Story