5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு அணைக்கப்பட்டது சத்தி வனப்பகுதியில் பற்றி எரிந்த காட்டுத்தீ
சத்தியமங்கலம் வனப்பகுதியில் காட்டுத்தீ பற்றி எரிந்தது. 5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது.
சத்தியமங்கலம்,
சத்தியமங்கலம் வனச்சரகத்துக்கு உள்பட்ட சிக்கரசம்பாளையம் வனப்பகுதியில் உள்ள மரம், செடி–கொடிகள் காய்ந்த நிலையில் காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் வனப்பகுதியில் திடீரென தீப்பிடித்தது. இந்த தீ மளமளவென பரவி காட்டுத்தீ போல் பற்றி எரிந்தது.
இதனை கவனித்த பொதுமக்கள் இதுபற்றி சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வனச்சரகர் பெர்னாட் மற்றும் வன ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும், சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று, வனத்துறையினருடன் இணைந்து வனப்பகுதியில் பற்றி எரிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
5 மணி நேர போராட்டத்துக்கு பிறகு இரவு 12 மணி அளவில் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதோடு முற்றிலுமாக அணைக்கப்பட்டது. எனினும் 3 ஏக்கர் பரப்பளவில் உள்ள மரங்கள் அனைத்தும் எரிந்து நாசமானது.
இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘போதிய மழை இல்லாததால் சத்தியமங்கலம் வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் உள்ள மரம், செடி–கொடிகள் அனைத்தும் காய்ந்து கருகிய நிலையில் காணப்படுகிறது. அதனால் வனப்பகுதியில் உள்ள சாலையோரங்களில் நடந்து செல்பவர்கள் பீடி–சிகரெட்டுகளை புகைத்துவிட்டு வனப்பகுதியில் போட்டு செல்லக்கூடாது’ என்றனர்.