பர்கூர் மலைப்பாதையில் தடுப்புச்சுவரில் மோதி நடுரோட்டில் நின்ற லாரி 13 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


பர்கூர் மலைப்பாதையில் தடுப்புச்சுவரில் மோதி நடுரோட்டில் நின்ற லாரி 13 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 6 April 2019 10:30 PM GMT (Updated: 2019-04-07T02:30:40+05:30)

பர்கூர் மலைப்பாதையில் தடுப்புச்சுவரில் லாரி மோதி நடுரோட்டில் நின்றது. இதனால் 13 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அந்தியூர்,

சேலம் மாவட்டம் சங்ககிரியில் இருந்து கர்நாடக மாநிலத்துக்கு சிமெண்டு பாரம் ஏற்றிய லாரி ஒன்று புறப்பட்டது. லாரியை ராமாபுரத்தை சேர்ந்த ராமன் (வயது 40) என்பவர் ஓட்டினார். இந்த லாரி ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதையில் உள்ள முதல் கொண்டை ஊசி வளைவில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் சென்று கொண்டு இருந்தது.

அப்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி மலைப்பாதை வளைவில் உள்ள தடுப்புச்சுவரில் மோதியது. மேலும் லாரியில் பழுதும் ஏற்பட்டது. இதனால் லாரி நடுரோட்டில் நின்றது. அந்த லாரி ரோட்டை மறித்தபடி நின்றதால் அந்த வழியாக வந்த 2 சக்கர வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களாலும் மேற்கொண்டு செல்ல முடியவில்லை. இதனால் கார், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் வந்தவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் பர்கூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்தியூரில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து லாரியில் இருந்து சிமெண்டு மூட்டைகள் அனைத்தும் இறக்கப்பட்டன. அதன்பின்னர் கிரேன் மூலம் லாரி மாலை 4 மணி அளவில் மீட்கப்பட்டது.

தடுப்புச்சுவரில் மோதி லாரி நடுரோட்டில் நின்றதால் 13 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில், ‘இன்று (நேற்று) அதிகாலை சிமெண்டு பாரம் ஏற்றி வந்த லாரி தடுப்புச்சுவரில் மோதிய விபத்தால் பர்கூர் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இதன்காரணமாக பஸ்சில் வந்த பயணிகள் அனைவரும் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று, பர்கூர் சோதனைச்சாவடி பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ் ஏறி அந்தியூருக்கு சென்றனர். இதனால் பெண்கள் மற்றும் முதியவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். பர்கூர் மலைப்பாதை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் பழுது மற்றும் விபத்து காரணமாக நடுரோட்டில் நிற்பதால் மணிக்கணக்கில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதனால் பர்கூர் மலைப்பாதை வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும்’ என்றனர்.

இதேபோல் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்துக்கு மர பாரம் ஏற்றிய லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரி நேற்று காலை 7 மணி அளவில் ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே திம்பம் மலைப்பாதையில் உள்ள 9-வது கொண்டை ஊசி வளைவில் வந்து கொண்டு இருந்தது. அப்போது குறுகிய வளைவில் லாரி திரும்ப முடியாமல் நடுரோட்டில் அப்படியே நின்றுவிட்டது.

இதன்காரணமாக அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் நீண்ட வரிசையில் அணிவகுத்தபடி நின்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் ஆசனூர் மற்றும் பண்ணாரி சோதனைச்சாவடிகளில் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டன. இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். பண்ணாரியில் இருந்து கிரேன் வரவழைக்கப்பட்டு காலை 9 மணி அளவில், லாரி மீட்கப்பட்டது.

அதன்பின்னரே கார், மோட்டார்சைக்கிள், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்லத்தொடங்கின. திம்பம் மலைப்பாதையில் உள்ள வளைவில் லாரி திரும்ப முடியாமல் நின்றதால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story