‘மக்கள் விரோத மோடி அரசை அகற்ற கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்’ எச்.வசந்தகுமார் பேச்சு


‘மக்கள் விரோத மோடி அரசை அகற்ற கை சின்னத்துக்கு வாக்களியுங்கள்’ எச்.வசந்தகுமார் பேச்சு
x
தினத்தந்தி 7 April 2019 4:30 AM IST (Updated: 7 April 2019 2:37 AM IST)
t-max-icont-min-icon

மக்கள் விரோத மோடி அரசை அகற்ற கை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று தேர்தல் பிரசாரத்தின் போது எச்.வசந்தகுமார் கூறினார்.

அருமனை,

கன்னியாகுமரி தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் எச்.வசந்தகுமார் போட்டியிடுகிறார். இவர் நேற்று ஞாறாம்விளையில் இருந்து பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து திக்குறிச்சி, கடைவிளை, துண்டத்தாறவிளை, சிதறால், பள்ளிக்கோணம், அம்பலக்கடை, பனங்கரை, மாறப்பாடி, குழிச்சல், அருமனை, தெற்றிவிளை, மஞ்சாலுமூடு, உத்தரம்கோணம் உள்பட பல்வேறு இடங்களுக்கு திறந்த ஜீப்பில் சென்றவாறு மக்களை சந்தித்து கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார். மேலும் சந்தைகள், மார்க்கெட்டுகள், கடை வீதிகளில் நடந்தே சென்று வாக்கு சேகரித்தார்.

அவருடன் குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மனோதங்கராஜ் எம்.எல்.ஏ., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் செல்லசாமி மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் சென்றனர்.

பிரசாரத்தின் போது எச்.வசந்தகுமார் கூறியதாவது:-

மோடி அரசு இந்த நாட்டில் இருந்தால் ஜனநாயகத்துக்கு ஆபத்து. மோடி ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்துவிட்டார். எனவே மக்கள் விரோத மோடி அரசு அகற்றப்பட வேண்டும். அதற்காக தான் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நான் போட்டியிடுகிறேன். ராகுல்காந்தி தலைமையில் நாங்கள் கண்டிப்பாக ஆட்சி அமைப்போம்.

காங்கிரஸ் வேட்பாளர் பணம் கொடுப்பதாக பொன்.ராதாகிருஷ்ணன் சொல்கிறார். குமரி மாவட்ட மக்கள் படித்தவர்கள். சுயமரியாதை உள்ளவர்கள். சுயமரியாதை உள்ள எவரும் ஓட்டுக்கு பணம் கொடுத்தால் வாங்க மாட்டார்கள். எனவே இப்படிப்பட்ட பேச்சுகளை பொன்.ராதாகிருஷ்ணன் பேச வேண்டாம். நாங்கள் கொள்கை ரீதியாக நின்று போராடுகிறோம். மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையின் பேரில்தான் தேர்தலில் நிற்கிறோமே தவிர பணத்தை வைத்து இல்லை. எனவே அனைவரும் கை சின்னத்துக்கு வாக்குகளை தாருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறுகையில், “இல்லாத ஒன்றையும், கொடுக்க முடியாததையும் கொடுப்பேன் என்று பொய் சொல்லி மோடி ஆட்சிக்கு வந்தார். பா.ஜனதா தங்களின் அரசியல் ஆதாயத்துக்காக வருமான வரித்துறை மற்றும் சி.பி.ஐ.யை தவறாக பயன்படுத்துகிறது” என்றார்.

இதைத் தொடர்ந்து அருமனையில் பேசியபோது, “குமரி மாவட்டத்தில் 1½ லட்சம் பெண்கள் முந்திரி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் மத்திய அரசின் தவறான கொள்கையால் முந்திரி ஆலைகள் மூடப்படும் நிலையில் உள்ளன. எனவே நான் வெற்றி பெற்றால் முந்திரி ஆலை புத்துயிர் பெற பாடுபடுவேன். மேலும் மலையோர பகுதி மக்கள் மற்றும் கிராம மக்களின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபடுவேன்“ என்றார். அப்போது விஜயதரணி எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர். 
1 More update

Next Story