மாற்றுத்திறனாளிகள், வாக்களிப்பதற்கான சேவைகளை செயலி மூலம் பெறலாம் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தகவல்


மாற்றுத்திறனாளிகள், வாக்களிப்பதற்கான சேவைகளை செயலி மூலம் பெறலாம் கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தகவல்
x
தினத்தந்தி 7 April 2019 4:00 AM IST (Updated: 7 April 2019 2:51 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கான சேவைகளை செயலி மூலம் பெற்று கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்து உள்ளார்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் அனைவரையும் தேர்தலில் வாக்களிக்க வைப்பது குறித்த, அனைவருக்கும் கல்வி இயக்கத்தை சேர்ந்த ஆசிரிய, ஆசிரியைகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான கே.எஸ்.பழனிசாமி தலைமை தாங்கினார்.

தொடர்ந்து அவர் பேசும் போது கூறியதாவது:–

நாடாளுமன்ற தேர்தல் வருகிற 18–ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி வாக்காளர்கள் 100 சதவீத வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், மாவட்டத்தில் உள்ள 2 ஆயிரத்து 482 வாக்குசாவடிகளில் வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகள், சிரமம் இன்றி வாக்களிப்பதற்காக சாய்வுதளம் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து தொகுதிகளையும் கண்காணிக்க மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தொகுதி வாரியாக கண்காணிக்க அனைவருக்கும் கல்வி இயக்கத்தை சேர்ந்த சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த சிறப்பு ஆசிரியர்கள் வீடு, வீடாக சென்று அந்த பகுதியில் உள்ள மாற்றுத்திறனாளிகள் எவ்வகை மாற்றுத்திறனாளிகள் என்பதை கண்டறிந்து அருகில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

மேலும், 100 சதவீதம் வாக்களிப்பை வலியுறுத்தி ஊர்வலம் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கவும், வானொலி மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு துணையாக ஒருவர் வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் வாக்களிக்க வசதியாக பிரெய்லி வகை பூத் சிலிப்பும் வழங்கப்பட உள்ளது. தேர்தல் அன்று மாற்றுத்திறனாளிகளை அழைத்து வர வாகன வசதியும் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 9 ஆயிரத்து 273 மாற்றுத்திறனாளிகள் 18 வயது பூர்த்தி அடைந்த வாக்காளர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். மேலும், பிற மாற்றுத்திறனாளிகளும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் கண்டறியப்பட உள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான (பி.டபிள்யூ.டி. ஆப்) செயலி மூலம் சக்கர நாற்காலி பெறுவதற்காக முன்பதிவு செய்வதற்கும், வாக்குசாவடி அமைவிடம் தெரிந்து கொள்ளவும், ஏனைய இதர சேவைகளை பெறுவதற்கும் இந்த செயலியை பயன்படுத்தி கொள்ளலாம். எனவே திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தகுதியான மாற்றுத்திறனாளி வாக்காளர்களும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து அதில் வழங்கப்படும் சேவைகளை பெற்று பயனடையலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story