பரமத்தி வேலூர் அருகே தி.மு.க. பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை


பரமத்தி வேலூர் அருகே தி.மு.க. பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை
x
தினத்தந்தி 7 April 2019 4:45 AM IST (Updated: 7 April 2019 3:01 AM IST)
t-max-icont-min-icon

பரமத்தி வேலூர் அருகே, தி.மு.க. பிரமுகர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

பரமத்தி வேலூர்,

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அருகே உள்ள கொளக்காட்டுபுதூரை சேர்ந்தவர் வேலுசாமி (வயது 60). தி.மு.க. பிரமுகரான இவர் தேங்காய் பருப்பு வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு ராசம்மாள் (55) என்ற மனைவியும், செந்தில் என்ற மகனும், கோமதி என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் வேலுசாமியின் வீட்டில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக ரூ.14 கோடி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக நாமக்கல் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஜெயராமன், கமலக்கண்ணன் மற்றும் பறக்கும் படையை சேர்ந்த செங்கோடன் உள்ளிட்ட குழுவினர் நேற்று மாலை 6 மணி அளவில் அவரது வீட்டுக்கு சென்று சோதனையிட்டனர்.

அவரது வீடு, மாட்டுத்தொழுவம் மற்றும் தேங்காய் பருப்பு குடோன் உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடந்தது. இரவு 8 மணி வரை நடைபெற்ற இந்த சோதனையில் அவரது வீட்டில் ரூ.3 லட்சத்து 48 ஆயிரம் கைப்பற்றப்பட்டது.

ஆனால் அந்த பணத்துக்கு வேலுசாமி உரிய ஆவணங்கள் வைத்திருந்தார். இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் பணத்தை ஒப்படைத்துவிட்டு திரும்பிச்சென்றனர். வருமான வரித்துறையினரின் இந்த சோதனை காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Next Story