சேலத்தில், 12-ந் தேதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி பிரசாரம்


சேலத்தில், 12-ந் தேதி தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி பிரசாரம்
x
தினத்தந்தி 6 April 2019 10:30 PM GMT (Updated: 2019-04-07T03:04:20+05:30)

சேலத்தில் வருகிற 12-ந் தேதி நடக்கும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி கலந்து கொண்டு தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார்.

சேலம்,

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வருகிற 18-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி தலைவர்கள், சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சூறாவளி பிரசாரம் செய்து தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

இந்தநிலையில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி வருகிற 12-ந் தேதி சேலம், தேனியில் பிரசாரம் செய்கிறார். சேலத்தில் அன்றைய தினம் நடைபெற உள்ள தேர்தல் பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசுவார் என்றும், அதற்கான ஏற்பாடுகளை செய்ய காங்கிரஸ் பொறுப்பாளர்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி நியமித்துள்ளார்.

அதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஆர்.தேவதாஸ், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கே.ராணி, வாழப்பாடி ராமசுகந்தன் ஆகியோர் பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்வார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகர், சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, விழுப்புரம் மத்தி, விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, நாமக்கல் கிழக்கு, நாமக்கல் மேற்கு, கரூர், ஈரோடு மாநகர், ஈரோடு வடக்கு, ஈரோடு தெற்கு ஆகிய பகுதிகளை சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஊடகத்துறை தலைவர் கோபண்ணா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சேலத்திற்கு வருகிற 12-ந் தேதி ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்திற்கு வருகை தர உள்ளதையொட்டி பிரசார பொதுக்கூட்டத்தை எங்கு நடத்துவது என்பது குறித்து காங்கிரஸ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இதற்காக இடம் தேர்வு செய்யும் பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல்காந்தி பிரசாரம் செய்வார் என்றும், சேலத்தில் அன்றைய தினம் காலை 10 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கு வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Next Story