நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றால் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. பேச்சு

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றால் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. பேசினார்.
கன்னிவாடி,
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமி பிரசாரத்தில் ஈடுபட்டார். அவரை ஆதரித்து தி.மு.க. துணை பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான இ.பெரியசாமி எம்.எல்.ஏ. ரெட்டியார்சத்திரம், கொத்தப்புளி உள்ளிட்ட 11 கிராமங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:–
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தால் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். ஆண்டுதோறும் ரூ.72 ஆயிரம் உதவித்தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படும். மகளிர் சுயஉதவி குழுக்களின் செயல்பாடுகளை மேம்படுத்த ரூ.50 ஆயிரம் கடன் உதவி வழங்கி ஊக்குவிக்கப்படும். அதன் மூலம் அவர்கள் சுயதொழில் புரிந்து தங்கள் வருமானத்தை பெருக்கி கொள்ளலாம். இது கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரத்துக்கு வழி வகுக்கும்.
திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றால், மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். எனவே திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமிக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு இ.பெரியசாமி எம்.எல்.ஏ. பேசினார்.






