"நோபல் பரிசு கொடுக்கும் வகையில் பொய் சொல்வதில் வல்லவர் மு.க.ஸ்டாலின்" ஆண்டிப்பட்டி பிரசாரத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு


நோபல் பரிசு கொடுக்கும் வகையில் பொய் சொல்வதில் வல்லவர் மு.க.ஸ்டாலின் ஆண்டிப்பட்டி பிரசாரத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
x
தினத்தந்தி 6 April 2019 11:15 PM GMT (Updated: 2019-04-07T03:16:06+05:30)

நோபல் பரிசு கொடுக்கும் வகையில் பொய் சொல்வதில் வல்லவர் மு.க.ஸ்டாலின் என்று ஆண்டிப்பட்டியில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தேனி,

அ.தி.மு.க. கூட்டணி சார்பில், தேனி நாடாளுமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ப.ரவீந்திரநாத்குமார் போட்டியிடுகிறார். அதே போல், இடைத்தேர்தல் நடக்கும் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக லோகிராஜன், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக மயில்வேல் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து, முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேனி மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது ஆண்டிப்பட்டி எம்.ஜி.ஆர். சிலை முன்பு திரண்டு நின்ற மக்கள் மத்தியில் பிரசார வேனில் நின்றபடி எடப்பாடி பழனிசாமி வாக்குசேகரித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:–

அ.தி.மு.க. வலுவான கூட்டணி அமைத்து உள்ளது. ஆண்டிப்பட்டி எம்.ஜி.ஆரின் கோட்டை. அவர் மறைவுக்குப் பிறகு இது ஜெயலலிதாவின் கோட்டை. இந்த இரு பெரும் தலைவர்களின் கோட்டையான இந்த தொகுதியில் சிலர் செய்த சூழ்ச்சியாலும், துரோகத்தாலும் இடைத்தேர்தலை சந்திக்கிறோம். இந்த இடைத்தேர்தல் மூலம் துரோகம் செய்த கும்பலுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.

ஜெயலலிதா தனக்கு பின்னும் 100 ஆண்டுகள் இந்த ஆட்சியும், அதிகாரமும் இருக்கும் என்று கூறினார். ஜெயலலிதாவுக்கு நன்றி சொல்லும் விதமாக இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும். ஜெயலலிதா மறைந்தாலும் அவரின் கனவை நிறைவேற்ற வேண்டும். எம்.ஜி.ஆர். ஏழைகளுக்காக பல்வேறு பிரச்சினைகளுக்குப் பிறகு கட்சி தொடங்கினார். அவருக்கு பிறகு ஜெயலலிதா பல்வேறு துரோகங்களை சந்தித்து கட்சியை வளர்த்தார். இது மக்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட இயக்கம். இதை ஒழிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டும்.

மத்தியில் நிலையான ஆட்சி தேவை. நாடு பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதற்கு சிறந்த, திறமையான பிரதமர் வேண்டும். மோடி சிறந்த, திறமையான பிரதமர். தேனி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஒருவர் போட்டியிடுகிறார். அந்த வேட்பாளர் ஒவ்வொரு தேர்தலிலும் வெவ்வேறு பகுதிகளில் போட்டியிடுகிறார். கிருஷ்ணகிரியில் போட்டியிட்டார். பின்னர் கோபிசெட்டிபாளையத்தில் போட்டியிட்டார். இப்போது தேனிக்கு வந்திருக்கிறார். அடுத்த தேர்தலில் எங்கே இருப்பார் என்று தெரியாது.

அத்தகைய இறக்குமதி செய்த வேட்பாளருக்கு வாக்களிக்காதீர்கள். அ.தி.மு.க. வேட்பாளர் ரவீந்திரநாத்குமார் மக்களுக்கு சேவை செய்யும் உள்ளம் படைத்தவர். ஏற்கனவே இந்த தொகுதியில் வெற்றி பெற்ற நபர் நடைபயிற்சி செல்கிறார். நீச்சல் குளத்தில் நீச்சல் அடிக்கிறார். அமெரிக்காவில் பிறந்தவர் போல சொகுசு விடுதியில் தங்கிக் கொள்கிறார்.

நான் ஒரு விவசாயி. நான் மண்வெட்டி பிடித்து வேலை பார்த்தவன். விவசாயியாக இருந்து, மக்களின் கஷ்ட, நஷ்டங்களை உணர்ந்து படிப்படியாக உயர்ந்து இன்றைக்கு இந்த நிலைக்கு வந்துள்ளேன்.

உடலில் உயிர் எப்படி முக்கியமோ அதுபோல விவசாயிகளுக்கு தண்ணீர் முக்கியம். அதற்காக நீர் மேலாண்மை திட்டத்தை நாங்கள் தொடங்கி இருக்கிறோம். ஒரு ஆண்டுக்கு முன்பு 4 ஓய்வு பெற்ற தலைமை பொறியாளர்களை வைத்து ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு நடத்தப்பட்டது. தண்ணீர் வீணாக செல்லும் பகுதிகள் கணக்கெடுக்கப்பட்டது. தண்ணீர் வீணாகும் பகுதிகளில் தடுப்பணைகள் கட்டி தண்ணீரை தேக்கி நிலத்தடி நீரை உயர்த்தி விவசாயிகளுக்கு தருகிறோம். அதேபோல் ஏரி, குளங்களை ஆழப்படுத்த குடிமராமத்து திட்டத்தை கொண்டு வந்து மாநிலம் முழுவதும் 3 ஆயிரம் ஏரிகள் தூர்வாரப்பட்டுள்ளன. எஞ்சிய ஏரிகளும் தூர்வாரப்படும்.

எல்லா குடும்பங்களுக்கும் தைபொங்கல் பரிசு ரூ.1000 வழங்கினோம். அதுபோல் விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை அறிவித்திருந்த நிலையில் மு.க.ஸ்டாலின் தேர்தல் ஆணையத்திடம் சென்று ரூ.2 ஆயிரம் வழங்கக் கூடாது என்று புகார் தெரிவித்தார். அதனால் அந்த திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த உடன் எல்லா தொழிலாளர்களுக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.

நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் வீடு இல்லாமல் வசிக்கும் ஏழைகளுக்கு அடுக்குமாடி கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும். கிராமப்புறங்களில் வாழும் ஏழைகளுக்கு பசுமை வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். விலையில்லா கறவை மாடுகள், விலையில்லா ஆடுகள், கோழிக்குஞ்சுகள் கொடுக்கப்படும்.

நானும் ஆடு, மாடு, கோழிகள் எல்லாம் வளர்த்து வருகிறேன். ஜல்லிக்கட்டு காளையும் வளர்த்து வருகிறேன். அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டில் எனது காளையும் களத்தில் நிற்கும்.

நான் இங்கு முதல்–அமைச்சராக பேசவில்லை. நீங்கள் அத்தனை பேரும் தான் முதல்–அமைச்சர். இது உங்கள் கட்சி. இது உங்களின் ஆட்சி. தேனி மாவட்டத்துக்கான சில திட்டங்களை கோரிக்கையாக வேட்பாளர்கள் என்னிடம் கொடுத்துள்ளனர். அதன்படி, குள்ளப்பகவுண்டன்பட்டியில் உள்ள முல்லைப்பெரியாற்றில் இருந்து குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து ஆண்டிப்பட்டி பகுதியில் தெப்பம்பட்டி உள்ளிட்ட 152 கிராமங்களில் உள்ள குளங்களில் தண்ணீர் சேமிக்கப்படும். ஆண்டிப்பட்டி ஒன்றியத்தில் உள்ள கன்னியப்பபிள்ளைபட்டி ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும். வருசநாடு, வாலிப்பாறை பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்க பரிசீலிக்கப்படும். ஆண்டிப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் 30 ஊராட்சிகளுக்கு தரமான குடிநீர் வினியோகிக்கப்படும். ஆண்டிப்பட்டி பேரூராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்படும். ஆண்டிப்பட்டியில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி மற்றும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டு தேவையான உபகரணங்கள் வழங்கப்படும்.

தற்போது நடைபெறுவது நாடாளுமன்ற தேர்தல். ஆனால் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார். எதிர்க்கட்சியால் எப்படி தேர்தல் அறிக்கைகளை செயல்படுத்த முடியும். பச்சை பொய் சொல்கிறார்கள். இப்போது நாங்கள் ஆட்சியில் இருக்கிறோம். அ.தி.மு.க. ஆட்சி நடந்து வருகிறது. ஆட்சியில் இருக்கிற நாங்கள் அளிக்கிற வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

கடந்த முறை தேர்தல் நேரத்தில் தி.மு.க.வினர் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று சொன்னார்கள். நிலம் கொடுத்தார்களா? நிலத்தை கண்ணில் கூட காட்டவில்லை. இப்போது அதை தள்ளுபடி செய்கிறோம், இதை தள்ளுபடி செய்கிறோம் என்று மக்களைப் போட்டு குழப்புகிறார்கள். கொல்லைப்புறம் வழியாக ஓட்டு வாங்குவதற்காக நடத்தும் நாடகம் தான் இது. இதனை மக்கள் நம்ப வேண்டாம். ஏனெனில், விஞ்ஞான மூளை படைத்தவர்கள் தி.மு.க.வினர். கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்தவர்கள். 2ஜி–யில் கோடிக்கணக்கில் ஊழல் செய்தவர்கள் தி.மு.க.வினர். பொய் சொல்வதில் வல்லவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். பொய் பேசுவதற்கு நோபல் பரிசு கொடுப்பது என்றால் அதை மு.க.ஸ்டாலினுக்கு தான் கொடுக்க வேண்டும். நாங்கள் சொல்வதை செய்வோம். செய்வதை தான் சொல்வோம்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இதைத் தொடர்ந்து க.விலக்கு, கண்டமனூர், கடமலைக்குண்டு, குப்பிநாயக்கன்பட்டி, சீப்பாலக்கோட்டை, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் ஆகிய இடங்களில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–

கோதாவரி–காவிரி ஆறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும். இந்த திட்டம் ஜெயலலிதாவின் கனவு திட்டம். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் அங்கிருந்தும் ஆண்டிப்பட்டி பகுதிகளுக்கு குடிநீர் வழங்கப்படும். தேனி மாவட்டம் வளர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக தான் மருத்துவக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரிகளை ஜெயலலிதா திறந்து வைத்துள்ளார். தரமான கல்வி, உலகளாவிய அறிவை மாணவ, மாணவிகள் பெற வேண்டும் என்பதற்காக தான் மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 35 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது.

விவசாய துறை மட்டுமல்ல தொழில் துறையும் முன்னேற வேண்டும் என்பதற்காக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தி ரூ.3 லட்சத்து 41 ஆயிரம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3,500 தொழிற்சாலைகள் வர உள்ளன. இதனால் நேரடியாக 5 லட்சம் வேலைவாய்ப்புகளும், மறைமுகமாக 5 லட்சம் வேலைவாய்ப்புகளும் உருவாகும்.

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த பேபி அணையை பலப்படுத்த வேண்டும். இந்த பணிக்காக தமிழக அரசு சார்பில் ரூ.7½ கோடிக்கு ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. ஆனால் பணிகளை மேற்கொள்ள கேரள அரசு தடுத்துள்ளது. பேபி அணை அருகில் உள்ள மரங்களை வெட்டுவதற்கு வனத்துறை அனுமதி கொடுக்கவில்லை. இதனால் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு வந்த பின்னர், நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தும் பணிகளை தொடங்குவோம்.

உணவு தானியம் உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. கல்வியில் முதலிடத்தில் உள்ளோம். சட்டம், ஒழுங்கை பாதுகாப்பதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மத்தியில் அமையும் போது நமக்கு தேவையான திட்டங்கள் கிடைக்கும்.

வைகோ தி.மு.க.வில் இருந்து பிரிந்து தனிக்கட்சி தொடங்கினார். தற்போது தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துள்ளார். தனிக்கட்சி, தனி சின்னம் இருந்தும், ஈரோடு தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளர், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதை சந்தர்ப்பவாத கூட்டணி என்று மக்கள் சொல்கிறார்கள். அதையே நாங்கள் சொன்னால் மு.க.ஸ்டாலின் கோபப்படுகிறார். தி.மு.க.வினர் தான் பெண்களை தாக்குகிறார்கள். பிரியாணி கடையில் தாக்கினார்கள். அழகு நிலையத்தில் பெண்ணை தி.மு.க. நிர்வாகி ஒருவர் தாக்கினார். ரெயிலில் பெண் பயணிக்கு ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்தார். ஆனால், அ.தி.மு.க. ஆட்சியை அவர்கள் குறை கூறுகிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story