149 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல்: பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கையை கண்டித்து கோவையில் நகைக்கடைகள் அடைப்பு
கோவையில் நேற்று முன்தினம் இரவு பறக்கும் படை அதிகாரிகள் 149 கிலோ தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்தனர். இதனை கண்டித்து 400 நகைக்கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டம் நடத்தினார்கள்.
கோவை,
நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுப்பதற்காக பறக்கும்படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். அதன்படி கோவை புலியகுளம் மீனா எஸ்டேட் பகுதியில் பறக்கும்படை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வேனை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் அதில் 64 கிலோ தங்கக்கட்டிகள் இருப்பதாகவும் அதற்கு ஆவணங்கள் இருப்பதாக வேனில் இருந்தவர்கள் கூறினார்கள்.
இதைதொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் அந்த வேனில் மொத்தம் 149 கிலோ தங்கக்கட்டிகள் இருப்பது தெரியவந்தது. அதற்கு உரிய ஆவணங்கள் இருப்பதாக வேனில் வந்தவர்கள் தெரிவித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த பறக்கும்படை அதிகாரிகள் இதுகுறித்து மாவட்ட கலெக்டர் ராஜாமணிக்கு தகவல் தெரிவித்தனர்.
தங்கக்கட்டிகள் கொண்டு வந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் 149 கிலோ தங்கக்கட்டிகளையும் அரசு கருவூலத்தில் வைக்க அவர் உத்தரவிட்டார். அவற்றின் மதிப்பு ரூ.44½ கோடி ஆகும். இதுபற்றி தகவல் கிடைத்ததும் தங்க நகைக்கடைக்காரர்கள், வியாபாரிகள், தயாரிப்பாளர்கள் உள்பட 50–க்கும் மேற்பட்டவர்கள் நேற்றுமுன்தினம் இரவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.
இந்த நிலையில் அரசு கருவூலத்தில் உள்ள 149 கிலோ தங்கக்கட்டிகளை விடுவிக்கக்கோரி தங்க நகை கடைக்காரர்கள், வியாபாரிகள் மாவட்ட கலெக்டர் ராஜாமணியை நேற்றுக்காலை சந்தித்து பேசினார்கள். அதற்கு கலெக்டர், 149 கிலோ தங்கக்கட்டிகள் பற்றிய ஆவணங்களை ஆய்வு செய்து வருமானவரித்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு இயக்கக அதிகாரிகள் ஆட்சேபனையில்லா சான்றிதழ் அளித்தால் விடுவிப்பதாக தெரிவித்தார்.
இதுபற்றிய தகவல் வருமானவரித்துறை மற்றும் மத்திய வருவாய் புலனாய்வு இயக்கக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன்பேரில் தங்கக்கட்டிகளை கொண்டு வந்தவர்கள் அளித்த ஆவணங்களை அவர்கள் சரிபார்த்து வருகிறார்கள். தங்கக்கட்டிகள் எங்கு எப்போது வாங்கப்பட்டன. அதற்கான ஆவணங்கள் உள்ளனவா? அவை கொண்டு செல்லப்படுவதாக கூறப்படும் வியாபாரிகள் உண்மையிலேயே தங்க நகை தொழில் செய்கிறார்களா? அந்த தங்கக்கட்டிகள் கடத்தி வரப்பட்டனவா? என்பன உள்பட பல்வேறு வகைகளில் சரிபார்க்கப்படும். ஆனால் சரிபார்ப்பு பணிகள் நேற்று முடிவடையாததால் நாளை (திங்கட்கிழமை) தான் தங்கக்கட்டிகள் விடுவிக்கப்படும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் போதிய ஆவணங்கள் இருந்தும் 149 கிலோ தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினரை கண்டித்து கோவையில் உள்ள 400–க்கும் மேற்பட்ட நகைக்கடைகளை அடைத்து கடை உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் முத்துவெங்கட்ராம், தங்க நகை வியாபாரிகள் சங்கத்தலைவர் சபரிநாத், தங்கக்கட்டிகள் விற்பனையாளர்கள் சங்க செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கூறியதாவது:–
கோவை புலியகுளத்தில் உள்ள தனியார் நிறுவன பாதுகாப்பு அறையில் இருந்து தான் தங்கக்கட்டிகள் எடுத்து வரப்பட்டன. அதில் வங்கிகள் தான் இருப்பு வைக்கும். எனவே அங்கு வைக்கப்படும் தங்கக்கட்டிகள் அனைத்திற்கும் கணக்கு உள்ளன. இந்த தங்கக்கட்டிகள் கோவையில் உள்ள 7 நகைக்கடைகள் மற்றும் வியாபாரிகளுக்கு உரிய ஆவணங்களுடன் கொண்டு செல்லப்பட்டன. ஆனால் உரிய ஆவணங்களை காண்பித்த பின்னரும் அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. தங்கக்கட்டிகளை வாங்கியவர்கள் அனைவரும் வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். 4 நாட்கள் தங்கக்கட்டிகளை எடுக்க முடியாது என்பதால் அதன் மூலம் நகை செய்து விற்க முடியவில்லை. இதனால் வியாபாரிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. கடை அடைக்கப்பட்டு உள்ளதாலும் நகைக்கடைக்காரர்களுக்கு வருவாய் இழப்பும், அரசுக்கு வரி வருவாய் இழப்பும் ஏற்பட்டு உள்ளது. இவ்வாறு அவர்கள்
கூறினார்கள்.