தமிழகத்தை புறக்கணிப்போருக்கு பாடம் புகட்டுங்கள்: பிரசார கூட்டத்தில் வைகோ பேச்சு


தமிழகத்தை புறக்கணிப்போருக்கு பாடம் புகட்டுங்கள்: பிரசார கூட்டத்தில் வைகோ பேச்சு
x
தினத்தந்தி 6 April 2019 11:15 PM GMT (Updated: 6 April 2019 10:45 PM GMT)

சிவகங்கை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பேசிய வைகோ, தமிழகத்தை புறக்கணிப்போருக்கு பாடம் புகட்டுங்கள் என்று கூறினார்.

காரைக்குடி,

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள பாண்டியன் திடலில் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரத்தை ஆதரித்து ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ தேர்தல் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தற்போதைய தேர்தலின் கதாநாயகன் காங்கிரசின் தேர்தல் அறிக்கை தான். திராவிட இயக்கங்கள் போராடி, வலியுறுத்தி வந்த கோரிக்கைகளை எல்லாம் காங்கிரஸ் தானாகவே தேர்தல் அறிக்கையில் தந்துள்ளது மகிழ்ச்சியை அளிக்கிறது. இதற்கு காரணம் தேர்தல் அறிக்கையை தயாரித்த குழுவின் தலைவர் ப.சிதம்பரம் என்பதாகும்.

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாக பா.ஜனதா அரசு கூறியது. ஆனால் இன்று வேலை இல்லா திண்டாட்டம் பெருகி உள்ளது. கார்பரேட் கம்பெனிகளுக்கு கடன்களை தள்ளுபடி செய்யும் இவர்கள், விவசாயிகள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடினாலும் அதை கண்டு கொள்ளவில்லை.

விவசாயிகள் தங்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக நிற்க வேண்டிய அவலநிலை உள்ளது. பா.ஜனதா அரசு மேகதாது, முல்லை பெரியாறு, காவிரி பிரச்சினைகளில் தமிழகத்திற்கு தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது. கஜா புயலால் 89 பேர் உயிரிழந்தனர். பல ஆயிரம் கோடி ரூபாய் சேதம் ஏற்பட்டது. ஆனால் மத்திய அரசு போதிய நிதி உதவியை செய்யவில்லை. ஜி.எஸ்.டி. யால் வர்த்தகர்கள் பெரும் பாதிப்படைந்தனர். அதனால் வர்த்தகர்களே நமது பிரசாரத்திற்கு வலிமை சேர்க்கின்றனர். தமிழகத்தை புறக்கணிப்போருக்கு இங்கு இடமில்லை என்பதை இந்த தேர்தல் மூலம் பாடம் புகட்டுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து ப.சிதம்பரம் பேசுகையில் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர், இந்த தொகுதிக்கு ப.சிதம்பரம் என்ன செய்திருக்கிறார் என்று கேட்டுள்ளார். நாங்கள் செய்தவைகளை சிலவற்றை இங்கு கூறுகிறேன். திருமயத்தில் பெல் தொழிற்சாலை, சிவகங்கையில் நறுமண தொழிற்சாலை, சிங்கம்புணரியில் கயிறு தொழிற்சாலை, காளையார்கோவிலில் பஞ்சாலை விரிவாக்க பணிகள், தொகுதியில் 3 தேசிய நெடுஞ்சாலைகள், தொகுதியின் தலைவாசலான மதுரை மற்றும் திருச்சி விமானநிலையங்களை பன்னாட்டு விமானநிலையமாக தரம் உயர்த்தியது. தொகுதியில் ஏராளமான வங்கி கிளைகள் திறக்கப்பட்டது.

20 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கியது. அகல ரெயில் பாதை, மருத்துவமனைகள் அமைத்தது. பல வருடங்களாக தூர்வாரப்படாமல் இருந்த 317 கண்மாய்கள், 97 ஊருணிகள் தூர் வராப்பட்டன. 2 துணை ராணுவ பயிற்சி நிலையங்கள் அமைக்கப்பட்டது. வங்கிகள் மூலமாக திறன்மேம்பாட்டு பயிற்சி மையம், பிரதமரின் மருத்துவ உதவி திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 38 லட்சம் நிதி பெற்று தந்தது. நாடாளுமன்ற தொகுதியின் மேம்பாட்டு நிதியை முழுமையாக செலவிட்டது என ஏராளமான சாதனைகளை செய்துள்ளோம்.

இவ்வாறு கூறினார். கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் புலவர் செவந்தியப்பன் தலைமை தாங்கினார். தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி முன்னிலை வகித்தார்.

இதேபோல திருப்பத்தூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் வைகோ பேசும்போது, தமிழகத்தில் 80 லட்சம் பட்டதாரிகள் வேலையில்லாமல் தவிக்கிறார்கள். கேரளத்தில் ஒரு இடத்தில் கூட பா.ஜனதா வெற்றி பெறாது. தமிழக அரசின் கமிஷன் கெடுபிடியால் பல தொழிற்சாலைகள் வெளிமாநிலங்களுக்கு சென்றுவிட்டன. காவிரி நீர் வராவிட்டால் டெல்டா மாவட்டங்கள் எத்தியோபியா போன்று ஆகிவிடும். இந்த தேர்தல் மூலம் தி.மு.க. ஆட்சி மலரும் என்றார். இந்த கூட்டத்தில் தி.மு.க. மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.ஆர்.பெரியகருப்பன் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சிவகங்கை, மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து வைகோ பிரசார கூட்டத்தில் பேசினார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று இரவு நடந்தது. இதில் வைகோ கலந்து கொண்டு ராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற தி.மு.க. கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி, சட்டமன்ற தொகுதி வேட்பாளர் சம்பத்குமார் ஆகியோருக்கு ஆதரவு திரட்டி பேசினார்.

Next Story