பா.ஜனதாவை எதிர்ப்பவர்கள் தேசவிரோதிகள் அல்ல அத்வானி கருத்துக்கு சிவசேனா ஆதரவு

பா.ஜனதாவை எதிர்ப்பவர்கள் தேசவிரோதிகள் இல்லை என்று கூறிய அத்வானியின் கருத்துக்கு சிவசேனா ஆதரவு தெரிவித்து உள்ளது.
மும்பை,
பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா ஆகியோர் இந்த நாடாளுமன்ற தேர்தலில் தேச பாதுகாப்பை ஒரு முக்கிய கொள்கையாக பிரசாரத்துக்கு பயன்படுத்தி வருகிறார்கள். அதேபோல பல பா.ஜனதா தலைவர்களும் எதிர்க்கட்சி தலைவர்களை தேச விரோதிகள் என்பதுபோல பேசிவருகிறார்கள்.
இந்த நிலையில் பா.ஜனதா மூத்த தலைவரான அத்வானி கருத்து சர்ச்சை ஏற்படுத்தியது. “அரசியல் ரீதியாக தங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களை பா.ஜனதா எதிரிகளாக கருதுவதில்லை. அவர்கள் நமது எதிர்ப்பாளர்கள் மட்டுமே.
அதேபோல, இந்திய தேசியவாதத்தில் அரசியல் ரீதியாக நம்மை ஏற்றுக்கொள்ளாதவர்கள் தேச விரோதிகள் என்றும் நாம் ஒருபோதும் கருதுவதில்லை” என்று அவர் கூறியிருந்தார்.
இதுகுறித்து சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியான தலையங்கத்தில் கூறியிருப்பதாவது:-
தேசிய பாதுகாப்பு முன்னுரிமை
அத்வானி இறுதியாக தனது மவுனத்தை கலைத்துள்ளார். அவர் தனது மனதில் இருந்து பேசியுள்ளார். இருப்பினும் பா.ஜனதா கட்சியின் நிறுவன தலைவர் ஒருவர் இப்படி பேசுவதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன?
தற்போது தேர்தல் பிரசாரங்களில் வளர்ச்சி, முன்னேற்றம், பணவீக்கம் போன்றவை பின்தங்கிவிட்டன, ஆனால் பாகிஸ்தான் பிரச்சினை, தேசிய பாதுகாப்பு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இது தற்காலிகமானது தான்.
தேசவிரோதிகள் அல்ல
வான்வழி தாக்குதலுக்கு ஆதாரம் கேட்ட ஒரே காரணத்துக்காக எதிர்க்கட்சிகளை தேசவிரோதிகள் என கூறுவது முறையாகாது என்றே அத்வானி எழுத்துக் களால் கூறுவதாக தெரிகிறது.
பிரதமர் மோடியுடன் நிற்காதவர்கள் தேசத்திற்கு சொந்தமானவர்கள் இல்லை என்ற வார்த்தையை பா.ஜனதா பிரசாரங்களில் முன்னெடுத்து வைக்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகள் இதை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.
அத்வானி தனது கருத்துகளை மீண்டும் சொல்ல தொடங்கியுள்ளார். பிரதமர் மோடியும் அத்வானியின் கருத்தை வரவேற்றுள்ளார். இது காற்று திசைமாறி வீசுவதற்கான அறிகுறியாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story






