இரும்பு குழாயில் மறைத்து கடத்தப்பட்ட ரூ.5½ கோடி தங்கம் பறிமுதல் பழைய பொருள் இறக்குமதியாளர் கைது
இரும்பு குழாயில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ.5½ கோடி தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் பழைய பொருள் இறக்குமதியாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மும்பை,
துபாயில் இருந்து கப்பலில் பழைய இரும்பு பொருட்களுடன் அதிகளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் நேற்று முன்தினம் நவிமும்பையில் உள்ள ஐவஹர்லால் நேரு துறைமுகத்துக்கு சென்று துபாயில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பழைய இரும்பு பொருட்கள் வைக்கப்பட்டு இருந்த 5 கண்டெய்னர்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு இரும்பு குழாய் வழக்கத்தை விட அதிக எடையுடன் இருந்தது. மேலும் அதன் 2 முனை பகுதியும் அடைக்கப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் அந்த குழாய் முனையை உடைத்து உள்ளே பார்த்தனர். இதில், அந்த குழாயுக்குள் கருப்பு டேப்பில் சுற்றி தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
அதிகாரிகள் அந்த குழாயில் இருந்து 19 கிலோ எடையுள்ள 163 தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.5 கோடியே 53 லட்சம் ஆகும்.
ஒருவர் கைது
இதையடுத்து அதிகாரிகள் துபாயில் இருந்து பழைய இரும்பு பொருட்களை இறக்குமதி செய்த ராஜேஸ் பன்சாலியை கைது செய்தனர்.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ராஜேஸ் பன்சாலி 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை புரோட்டீன் மாவு தான் இறக்குமதி செய்து உள்ளார். அதன்பிறகு பழைய இரும்பை இறக்குமதி செய்யும் நிறுவனத்தை தொடங்கி உள்ளார். எனவே இதற்கு முன்பு அதிகளவில் தங்க கடத்தலில் ஈடுபட்டு இருக்க வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் அவரிடம் தங்கத்தை வாங்கியவர்கள் உள்பட கடத்தலில் தொடர்புடைய பலரை தேடி வருகிறோம்’’ என்றார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் பித்தளை என ஏமாற்றி துபாயில் இருந்து மும்பைக்கு 106 கிலோ தங்கம் கடத்தி வந்த கும்பல் பிடிப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story