ராகுல்காந்தி ஆட்சிக்கு வந்தால்தான் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் - குஷ்பு பேச்சு


ராகுல்காந்தி ஆட்சிக்கு வந்தால்தான் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் - குஷ்பு பேச்சு
x
தினத்தந்தி 7 April 2019 4:30 AM IST (Updated: 7 April 2019 4:29 AM IST)
t-max-icont-min-icon

ராகுல்காந்தி ஆட்சிக்கு வந்தால்தான் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்று உசிலம்பட்டியில் பிரசாரம் செய்த நடிகை குஷ்பு கூறினார்.

உசிலம்பட்டி,

தேனி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, கருமாத்தூர், செல்லம்பட்டி, எழுமலை ஆகிய பகுதிகளில் அக்கட்சியின் செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு கை சின்னத்தில் வாக்குகளை கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:–

தொலைக்காட்சியில் நான் நடித்துவரும் நாடகத்தை பார்த்து தானே எனக்கு கைகொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கிறீர்கள். ஆனால் கேபிள் டி.வி. கட்டணத்தை உயர்த்திவிட்டார்கள். பொய்யான வாக்குறுதிகளை காங்கிரஸ் வழங்குவது இல்லை. எங்களுக்கு பொய் சொல்ல தெரியாது.

விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சொல்லியுள்ளோம். ஏற்கனவே பல்லாயிரம் கோடி விவசாய கடன்களை தள்ளுபடி செய்துள்ளோம். அதேபோன்று நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் விவசாய கடன்களை முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும்.

தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் மாபெரும் கூட்டணி அமைத்துள்ளோம். எங்கள் கூட்டணி மதசார்பற்ற கூட்டணி. இப்போது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

வீட்டில் இருந்து இளம்பெண்கள், மாணவிகள் வெளியே சென்றால், அவர்கள் வீடு திரும்பும் வரை வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு பெற்றோர் இருக்கின்றனர். எனவே பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்றால் ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story