நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2–ம் கட்ட பயிற்சி வகுப்பு கலெக்டர் ஆய்வு


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2–ம் கட்ட பயிற்சி வகுப்பு கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 7 April 2019 11:15 PM GMT (Updated: 7 April 2019 3:05 PM GMT)

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2–ம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதனை கலெக்டர் கந்தசாமி ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 1,273 வாக்குப்பதிவு மையங்களில் 2,374 வாக்குச்சாவடிகள் உள்ளன. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளில் 11 ஆயிரத்து 515 அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். இவர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்பு கடந்த 31–ந் தேதி நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான 2–ம் கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது. இந்த பயிற்சி வகுப்பு செங்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு மற்றும் வந்தவாசி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்தது.

பயிற்சி வகுப்பில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள அலுவலர்களுக்கான அஞ்சல் வாக்கு சீட்டு செலுத்தும் முறை, வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் பணிகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் அலுவலர்கள் வாக்குப்பதிவு எந்திரங்களை கையாளும் முறை, வாக்குப்பதிவிற்கு முந்தைய நாள் வாக்குச்சாவடிக்கு சென்றவுடன் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.

அதேபோல் வாக்குப்பதிவு நாளன்று மேற்கொள்ள வேண்டிய பணிகள், மாதிரி வாக்குப்பதிவு முறை, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுது ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும், வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவங்கள் மற்றும் தயார் செய்ய வேண்டிய உறைகள், மண்டல அலுவலரிடம் வாக்குப்பதிவு எந்திரங்களுடன் சேர்த்து அளிக்க வேண்டிய ஆவணங்கள் மற்றும் வாக்குப்பதிவு முகவர்களுக்கான குறிப்புகள் ஆகியவை தெரிவிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மவுண்டு சென்ட் ஜோசப் பள்ளியில் நடந்த பயிற்சி வகுப்பை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், பயிற்சி வகுப்பு நடைபெறும் ஒவ்வொரு அறையாக சென்று தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் இந்த பயிற்சி வகுப்பை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றார். மேலும் பயிற்சி வகுப்பில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு வழங்கப்பட இருந்த உணவை கலெக்டர் சாப்பிட்டு பார்த்தார்.

ஆய்வின் போது உதவி கலெக்டர் ஸ்ரீதேவி மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையடுத்து கீழ்பென்னாத்தூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கலசபாக்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


Next Story