நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டுப்பதிவு தொடக்கம்


நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டுப்பதிவு தொடக்கம்
x
தினத்தந்தி 7 April 2019 11:00 PM GMT (Updated: 7 April 2019 3:43 PM GMT)

சேலம் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தபால் ஓட்டுப்பதிவு நேற்று தொடங்கியது.

சேலம்,

தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வருகிற 18–ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இந்த தேர்தல் பணியில் 3½ லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள். இவர்களுக்கு ஏற்கனவே முதல் கட்ட பயிற்சி முடிவடைந்த நிலையில் நேற்று 2–ம் கட்ட பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நேற்று 11 இடங்களில் 2–ம் கட்ட பயிற்சி நடைபெற்றது. தபால் வாக்குகளை பொறுத்தவரையில், அதே தொகுதியில் தேர்தல் பணியாற்றுபவர்கள், கலெக்டரிடம் தடையில்லா சான்றை பெற்று, எந்த வாக்குச்சாவடியில் பணியில் உள்ளார்களோ, அதே வாக்குச்சாவடியில் தங்களது வாக்கை பதிவு செய்ய முடியும். பிற மாவட்ட வாக்குச்சாவடிகளில் பணியாற்றினால், சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் அலுவலரிடம் தபால் வாக்குக்கான 12, 12ஏ உள்ளிட்ட படிவங்களை பெற்று பூர்த்தி செய்து, அதற்கென வைக்கப்பட்டுள்ள பெட்டியில் செலுத்தலாம்.

சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரி, சின்னதிருப்பதி ஜெய்ராம் கல்லூரி, சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக், ஓமலூர் அருகே பத்மவாணி கலை, அறிவியல் கல்லூரி உள்ளிட்ட 11 இடங்களில் நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நேற்று தபால் ஓட்டுப்பதிவுக்கான படிவத்தை வாங்கி அதை பூர்த்தி செய்து அங்கு வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டனர்.

இதனால் 2–ம் கட்ட பயிற்சி நடந்த மையங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தபால் ஓட்டுப்பதிவு நடந்த மையங்களில் மாவட்ட கலெக்டர் ரோகிணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வருகிற 22–ந் தேதி வரை தபால் வாக்கை பதிவு செய்யலாம் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story