தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்தினர்


தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்தினர்
x
தினத்தந்தி 7 April 2019 11:00 PM GMT (Updated: 7 April 2019 4:35 PM GMT)

வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட மையங்களில் நேற்று தபால்வாக்குகளை செலுத்தினர்.

வேலூர்,

தமிழகத்தில் வருகிற 18-ந் தேதி (வியாழக்கிழமை) நாடாளுமன்றம் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. வேலூர் மாவட்டத்தில் வேலூர், அரக்கோணம் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், ஆம்பூர், சோளிங்கர் மற்றும் குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளுக்கும் அன்றைய தினம் வாக்குப்பதிவு நடக்கிறது.

மாவட்டத்தில் 3 ஆயிரத்து 473 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. வாக்குச்சாவடி மையங்களில் தேர்தல் பணிக்காக 18 ஆயிரத்து 755 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பயிற்சி மையங்களில் கடந்த மாதம் 24-ந் தேதி முதல் கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டது.

அதன்படி காட்பாடி தொகுதிக்கு காந்திநகர் டான்பாஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், வேலூர் தொகுதிக்கு வேலூர் சங்கரன்பாளையத்தில் உள்ள டி.கே.எம். பெண்கள் கல்லூரியிலும், அணைக்கட்டு தொகுதிக்கு திருமலைக்கோடியில் உள்ள ஸ்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், கே.வி.குப்பம் தொகுதிக்கு கே.எம்.ஜி. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் பயிற்சி நடந்தது. இதேபோல் மற்ற தொகுதிகளுக்கான அலுவலர்களுக்கும் அந்தந்த தொகுதிகளில் தேர்வு செய்யப்பட்டிருந்த மையங்களில் பயிற்சி நடந்தது.

இந்த நிலையில் நேற்று 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு நடந்தது. இதில் தேர்தல் பணி மேற்கொள்வதற்காக பயிற்சி பெற்ற அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அந்தந்த மையங்களிலேயே தபால் வாக்குகள் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வேலூர் டி.கே.எம். பெண்கள் கல்லூரியில் நடந்த பயிற்சி வகுப்பில் 1,225 பேர் கலந்து கொண்டனர். பயிற்சி வகுப்பை கலெக்டர் ராமன் ஆய்வு செய்தார். அப்போது அவர் அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த படிவங்களை பார்வையிட்டார். பின்னர் பயிற்சியில் கலந்துகொண்ட அரசு ஊழியர்கள் தங்களது தபால் வாக்கை செலுத்தினர்.

இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறியதாவது:-

2-ம் கட்ட பயிற்சியின் போது, அரசு ஊழியர்கள் தங்களது வாக்கை தபால் மூலம் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பயிற்சியில் கலந்து கொண்ட ஊழியர்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தபால் வாக்கை செலுத்தினர். இந்த மையத்தில் 2 பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. ஒரு பெட்டி நாடாளுமன்ற தேர்தலுக்கானது. மற்றொரு பெட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கானது.

நாடாளுமன்ற தொகுதிக்கு வாக்கு செலுத்தும் அரசு ஊழியர்கள் தங்களது தொகுதியை குறிப்பிட்டு தபால் வாக்கை ஒரே பெட்டியில் போடுவார்கள். மாலையில் தேர்தல் நடத்தும் அலுவலர் அந்தந்த நாடாளுமன்ற தொகுதிக்கு அளிக்கப்பட்ட தபால் வாக்கை பிரித்து எடுத்து செல்வார்கள்.

இதேபோல ஆம்பூர், சோளிங்கர், குடியாத்தம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல்களுக்கான தபால் வாக்குகள் ஒரே பெட்டியில் போடப்படும். அதை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தங்களது தொகுதிக்கான வாக்குகளை பிரித்து எடுத்துச் செல்வார்கள்.

இதேபோல அனைத்து மையங்களிலும் அரசு ஊழியர்கள் தங்களது தபால் வாக்கை செலுத்தினர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story